

மும்பை: சர்வதேச போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்கள் என்ற சாதனையை விராட் கோலி முறியடிப்பது கடினம் என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்தார்.
இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர்களில் ஒருவராக திகழ்பவர் விராட் கோலி. இவர் அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். இது சர்வதேச போட்டிகளில் அவரது 75-வது சதமாக அமைந்தது. டெஸ்ட் போட்டிகளில் மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு அவர் சதம் அடித்திருந்தார். தற்போது அவர் டெஸ்ட் போட்டிகளில் 28, ஒருநாள் போட்டிகளில் 46, சர்வதேச டி 20 போட்டிகளில் ஒரு சதம் என மொத்தம் 75 சதங்களை குவித்துள்ளார்.
இதனால் அவர் விரைவில் சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை முறியடிப்பார் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷோயப் அக்தர் அண்மையில் தெரிவித்திருந்தார். ஆனால், சச்சினின் 100 சதம் சாதனையை முறியடிப்பது விராட் கோலிக்கு எளிதான விஷயமல்ல என்று ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது: சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 100 சதங்கள் என்ற அபாரமான சாதனையைச் செய்திருப்பவர் சச்சின் டெண்டுல்கர். எனவே, அதை யாராவது கடக்க முடியும், முறியடிக்க முடியும் என்று கூறினால் அது பெரிய விஷயம்.
என்னைப் பொறுத்தளவில் விராட் கோலி இன்னும் 5 ஆண்டுகள் வரை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியும். அவர் சிறப்பாக விளையாடினாலும் 100 சதங்களை எடுப்பது என்பது கடினமான விஷயமாக இருக்கும். இவ்வாறு ரவி சாஸ்திரி கூறினார்.