

ஜடேஜா-ஆண்டர்சன் மோதல் விவகாரம் குறித்து தோனி சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
லார்ட்ஸில் நாளை நடைபெறும் 2வது டெஸ்ட் போட்டியின் முன்னதாக வழக்கமாக நடைபெறும் செய்தியாளர்கள் சந்திப்பில் எப்போதும் சர்ச்சைகள் பற்றி பேசாத தோனி சூசகமாக சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்கள் முதலில் இந்த விவகாரம் பற்றி கேட்டபோது நழுவிய தோனி, பிறகு குக் கூறிய கருத்து பற்றி கேட்டவுடன், பேசத் தொடங்கியுள்ளார்.
"செய்தியாளர்கள் சந்திப்பில் நீங்கள் சில கேள்விகளைக் கேட்கிறீர்கள், அது கடினமான கேள்விகளாக இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம், எனக்கு அதற்கு பதிலளிக்க அல்லது பதிலளிக்காமல் இருக்க உரிமை இருக்கிறது, ஆனால் நான் அதற்காக நான் உங்களை டச் செய்து எதுவும் செய்ய முடியுமா? அல்லது நீங்கள் என்னை டச் செய்வீர்களா? எது எது எப்படி நடக்கவேண்டுமோ அந்த முறைப்படித்தானே நடக்கிறது. கடைபிடிக்க வேண்டிய வரம்புகளைக் கடைபிடிக்க வேண்டும்” என்று ஆண்டர்சன், ஜடேஜாவைத் தொட்டுத் தள்ளியது உண்மைதான் என்பதை சூசகமாகக் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், “முதல் முறையாக இப்படி நடக்கவில்லை என்பது நல்ல விஷயம். இது போன்று தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது, பொதுவாக நாங்கள்தான் பாதிக்கப்பட்டவர்களாக இருந்து வந்திருக்கிறோம். யாராவது எதையாவது சொல்வார்கள் அல்லது செய்து விடுவார்கள் நாங்கள் பதிலுக்கு ஏதாவது செய்தால் எங்களுக்கு அபராதம் விதிக்கப்படும். இது போன்று பல்வேறு விதமான சர்ச்சைகள் எங்கள் மீது எழுப்பப் பட்டுள்ளது.
ஜடேஜாவைப் பொறுத்தவரை அவர் பதிலுக்கு ஒன்றும் செய்யவில்லை என்பதை நன்மையாகக் கருதுகிறேன், மேலும் அவர் இந்த விவகாரத்தை முறையாகவே வெளிப்படுதினார் என்றே நான் கருதுகிறேன். இதைத்தான் நாம் கற்றுக் கொண்டு அடுத்த நோக்கத்தை நோக்கி நகர வேண்டும். சரியான நேரத்தில் ஒதுங்குவது சிறந்தது. ஏனெனில் நாம் விளையாட்டு வீரர்கள், நாம் நடந்து கொள்வதை நிறைய பேர் காண்கிறார்கள், எனவே எங்களுக்கு நிறைய பொறுப்புணர்வு உள்ளது.
மீதமுள்ள இந்தத் தொடர் சரியான உணர்வுடன் ஆடப்படவேண்டும் என்று நான் நினைக்கிறேன். வீரர்கள் ஆக்ரோஷமாக இருக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோம், எதிரணி வீரர்களிடம் சில வார்த்தைகளைச் சொல்ல விரும்புகிறோம், ஆனால் எதற்கும் ஒரு வரம்பு உள்ளது. நல்ல உணர்வுடன் கிரிக்கெட் ஆடப்படவேண்டும், அதற்கான பொறுப்பு நமக்கு இருக்கிறது. அதனை சிறந்த முறையில் பராமரிக்க விரும்புகிறோம்”
இவ்வாறு கூறினார் தோனி.