

டெல்லி: இந்திய அணியின் தேர்வாளராக தான் இருந்தால் ஒருநாள் அணியில் தன்னைக் காட்டிலும் சுப்மன் கில்லைதான் தேர்வு செய்வேன் என இந்திய அணி வீரர் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட் அணியில் தவானுக்கு மாற்றாக கில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் மற்றும் டி20 பார்மெட்டில் தனக்கான இடத்தை அனுபவ வீரர் ஷிகர் தவான் கிட்டத்தட்ட இழந்துவிட்டார். கடைசியாக ஒருநாள் கிரிக்கெட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அவர் விளையாடி இருந்தார். ஐசிசி தொடர்களில் அபாரமாக ரன் குவிக்கும் பேட்ஸ்மேன் என தவான் அறியப்படுகிறார். எதிர்வரும் ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் அவர் இந்திய அணியில் இடம் பெறுவாரா என்பது சந்தேகமே. ஏனெனில் அவருக்கு மாற்றாக இந்திய ஒருநாள் அணியில் தொடக்க ஆட்டக்காரராக விளையாடி வரும் இளம் வீரர் சுப்மன் கில் சிறப்பாக ரன் குவித்து வருகிறார்.
இந்த நிலையில் அணியின் தேர்வாளர்கள், பயிற்சியாளர் மற்றும் கேப்டன் ஆகியோர் கில்லை தேர்வு செய்தது நியாயமான முடிவுதான் என தவான் தெரிவித்துள்ளார். ‘இந்திய அணியின் தேர்வாளராக நீங்கள் இருந்தால் கில் அல்லது தவானில் யாரை தேர்வு செய்வீர்கள்’ என்ற கேள்வி அவரிடம் கேட்கப்பட்டது.
“நான் என்ன நினைக்கிறேன் என்றால் கில், டெஸ்ட் மற்றும் டி20 பார்மெட்டில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார். அதனால் நான் தேர்வாளராக இருந்தால் அவருக்கு சர்வதேச போட்டிகளில் அனைத்து பார்மெட்டிலும் தொடர் வாய்ப்பு வழங்கவே விரும்புவேன். ஏனெனில் அவர் அபார ஃபார்மில் உள்ளார். அந்த காரணத்தால் அவர்தான் சரியான தேர்வாக இருப்பார். அதில் மாற்றுக் கருத்து இல்லை.
இப்போதைக்கு நான் தீவிரமாக பயிற்சி செய்து வருகிறேன். அணியில் எனக்கான வாய்ப்பு வரும் வரை காத்திருப்பேன். ஆனால், பயிற்சியை ஒருபோதும் கைவிட மாட்டேன்” என தவான் தெரிவித்துள்ளார். அவரது இந்த பதில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தனக்கான வாய்ப்பை காட்டிலும் இந்திய அணிதான் முக்கியம் என்ற அவரது எண்ணம் போற்றப்பட்டு வருகிறது.