உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: இந்தியாவின் நீது சாம்பியன்!

உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: இந்தியாவின் நீது சாம்பியன்!
Updated on
1 min read

புதுடெல்லி: நடப்பு உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் 48 கிலோ எடைப் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் இந்தியாவின் நீது கங்காஸ்.

மங்கோலியாவின் லஸ்டைகானி ஆல்டன்ட்செடக் (Lutsaikhany Altantsetseg) எனும் வீராங்கனையை 5-0 என வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் அவர். கடந்த ஆண்டு இதே பிரிவில் காமன்வெல்த் போட்டிகளில் தங்கப் பதக்கத்தை நீது வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பிரிவில் 22 வயதான நீது, அனுபவம் வாய்ந்த மங்கோலிய வீராங்கனையை எதிர்கொண்டு விளையாடினார். இருந்தாலும் இந்திய வீராங்கனைகளுக்கு எதிராக அவர் சிறப்பாக விளையாடியதில்லை. இதற்கு முன்னர் நிகத் ஜரீன், மீனாட்சி மற்றும் மேரி கோம் ஆகியோரிடம் அவர் தோல்வியை தழுவியுள்ளார். அது மீண்டும் தொடர்ந்துள்ளது.

இந்தத் தொடரில், கஜகஸ்தானைச் சேர்ந்த இரண்டு முறை ஆசிய சாம்பியன் பட்டம் வென்ற அலுவா பால்கிபெகோவை அரையிறுதியில் 5-2 என்ற கணக்கில் வீழ்த்தி இருந்தார் நீது.

டெல்லியில் நடைபெறும் உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில், நீது தவிர நிகத் ஜரீன், லோவ்லினா, சாவிட்டி ஆகிய 3 இந்திய வீராங்கனைகளும் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

75 கிலோ எடை பிரிவு அரைஇறுதியில் இந்தியாவின் லோவ்லினா, சீன வீராங்கனை லீ கியானொடு மோதினார். இதில் லோவ்லினா 4-1 கணக்கில் வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு தேர்வானார்.

81 கிலோ எடை பிரிவு அரையிறுதிச் சுற்றில் இந்திய வீராங்கனை சாவிட்டி ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிரீன்ட்ரீ என்பவருடன் மோதினார். இந்தப் போட்டியில் பெரும்பாலும் களத்தின் மையப் பகுதியிலேயே இருவரும் தங்கள் திறமையை காட்டிக்கொண்டிருந்தனர். முடிவில் சாவிட்டி 4-3 என்ற கணக்கில் வெற்றிபெற்று இறுதிப் போட்டியில் கால்பதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in