

மும்பை: WPL 2023 எலிமினேட்டர் சுற்றில் உ.பி. வாரியர்ஸ் அணியை வீழ்த்தி, மும்பை இந்தியன்ஸ் அணி பைனலுக்கு முன்னேறியுள்ளது.
முதலாவது மகளிர் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. 5 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் லீக் சுற்று முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலிடத்தை பிடித்து நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது. இறுதிப்போட்டியில் டெல்லி அணியுடன் மோதும் அணியை முடிவு செய்யும் எலிமினேட்டர் ஆட்டம் நேற்று நடந்தது. இதில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் உ.பி. வாரியர்ஸ் அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி நாட் ஷிவர் பிரன்ட்டின் அதிரடி ஆட்டத்தால், 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய நாட் ஷிவர் பிரன்ட் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 72 ரன்கள் விளாசினார்.
183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய உ.பி.வாரியர்ஸ், மும்பை அணியின் பந்துவீச்சை, குறிப்பாக இசபெல்லே வோங்கின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. அந்த அணியின் டாப் ஆர்டர் வீராங்கனைகள் விரைவில் ஆட்டமிழந்தனர். கிரண் நவ்கிரே, தீப்தி சர்மா ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்க போராடிய நிலையில் 43 ரன்கள் எடுத்திருந்த கிரண் நவ்கிரேவை இஸ்சி வாங் அவுட் ஆக்கினார். தொடர்ந்து அடுத்த இரண்டு பந்துகளில் மேலும் இரண்டு விக்கெட்களை வீழ்த்தி மகளிர் பிரீமியர் லீக்கின் முதல் ஹாட்ரிக் விக்கெட் சாதனையை படைத்தார்.
இதன்பின் தீப்தி சர்மா 16 ரன், அஞ்சலி சர்வானி, ராஜேஸ்வரி கயாக்வாட் தலா 5 ரன்னில் ஆட்டமிழக்க, உ.பி. வாரியர்ஸ் அணி, 17.4 ஓவர்களில் 110 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இஸ்சி வாங் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.