பனாமாவுக்கு எதிராக அசத்தல் ஆட்டம் - மெஸ்ஸி 800

பனாமாவுக்கு எதிராக அசத்தல் ஆட்டம் - மெஸ்ஸி 800
Updated on
1 min read

பியூனஸ் அயர்ஸ்: பனாமா அணிக்கு எதிரான நட்பு ரீதியிலான கால்பந்து ஆட்டத்தில் உலக சாம்பியனான அர்ஜெண்டினா 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் மெஸ்ஸி தனது 800-வது கோலை அடித்தார்.

அர்ஜெண்டினா - பனாமா அணிகள் இடையிலான நட்புரீதியிலான கால்பந்து போட்டி பியூனஸ் அயர்ஸ் நகரில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. லயோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற பிறகு பங்கேற்ற முதல் சர்வதேச போட்டி என்பதால் இந்த ஆட்டத்தை காண மைதானத்தில் 83 ஆயிரம் ரசிகர்கள் கூடியிருந்தனர். முன்னதாக அர்ஜெண்டினா வீரர்கள் வருகையையொட்டி சாலை நெடுகிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

ரசிகர்களின் ஆரவாரத்துக்கு இடையே போட்டி தொடங்கியது. தொடக்கத்தில் இருந்தே அர்ஜெண்டினா ஆதிக்கம் செலுத்திய போதிலும் முதல் பாதியில் கோல் அடிக்கப்படவில்லை. மெஸ்ஸி உள்ளிட்ட அர்ஜெண்டினா அணியின் வீரர்கள் பலமுறை பந்தை இலக்குக்கு அருகே கொண்டு சென்ற போதிலும் அதை கோலாக மாற்றத் தவறினர். 78-வது நிமிடத்தில் லயோனல் மெஸ்ஸி ஃப்ரீ கிக் வாய்ப்பில் இலக்கை நோக்கி பந்தை உதைத்தார்.

ஆனால் பந்து கோல்கம்பத்தின் விளிம்பில் பட்டு திரும்பியது. அப்போது சுதாரித்துக் கொண்ட தியாகோ அல்மடா பந்தை கோல் வலைக்குள் திணிக்க அர்ஜெண்டினா 1-0 என முன்னிலை பெற்றது. அடுத்த 10-வது நிமிடத்தில் அர்ஜெண்டினா அணிக்கு மீண்டும் ஃப்ரீ கிக் கிடைத்தது. இம்முறை மெஸ்ஸி உதைத்த பந்து காற்றில் ஊசல் ஆடியபடி கோல்வலைக்குள் பாய்ந்தது. அனைத்து விதமான கால்பந்து போட்டிகளிலும் மெஸ்ஸி அடித்த 800-வது கோலாக இது அமைந்தது. முடிவில் அர்ஜெண்டினா 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியை அர்ஜெண்டினா வீரர்கள் வெகுவாக கொண்டாடினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in