

புனே: 33-வது சீனியர் தேசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப் புனேவில் இன்று தொடங்குகிறது. இந்திய வாள்வீச்சு சம்மேளனம், மகாராஷ்டிரா வாள்வீச்சு சங்கம், டிஒய் பாட்டீல் சர்வதேச பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து இந்த போட்டியை நடத்துகிறது. வரும் 28-ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் ஒலிம்பியனான பவானி தேவி உட்பட நாடு முழுவதும் இருந்து 600-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
ஆடவர் மற்றும் மகளிருக்கான தனிநபர் மற்றும் அணிகள் பிரிவில் போட்டிகள் நடைபெறுகின்றன. இருபாலரும் பாயில், எஃப்பி, சேபர் பிரிவுகளில் கலந்து கொள்கின்றனர். தொடக்க நாளான இன்று மகளிருக்கான தனிநபர் சேபர் பிரிவில் பவானி தேவி களமிறங்குகிறார். தமிழகத்தைச் சேர்ந்த பவானி தேவி, ஒலிம்பிக்கில் கலந்துகொண்ட முதல் இந்திய வாள்வீச்சு வீராங்கனை என்ற பெருமையை கொண்டுள்ளார்.
அவருடன் ராஜஸ்தானைச் சேர்ந்த கரன் குஜ்ஜார், மகாராஷ்டிராவைச் சேர்ந்த கிரிஷ் ஜகதே, ஞானேஸ்வரி ஷிண்டே, காஷிஷ் பரத் உள்ளிட்டோரும் கலந்து கொள்கின்றனர். இந்தத் தொடரில் கலந்து கொள்ளும் வீரர், வீராங்கனைகள் 30 அணிகளை பிரநிதித்துவப்படுத்துவார்கள்.