

உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் டெல்லியில் உள்ள கே. டி. ஜாதவ் அரங்கில் நடைபெற்ற வருகிறன்றன. இதில் அரையிறுதிச் சுற்றுக்கு பல்வேறு பிரிவுகளில் 19 நாடுகளைச் சேர்ந்த வீராங்கனைகள் தேர்வு பெற்றிருக்கிறார்கள். இவர்களில் சீனா மற்றும் கஜகஸ்தானைச் சேர்ந்தவர்கள் அதிகமாக உள்ளனர் (முறையே 7,6). அடுத்த இடத்தில் இந்தியாவும் கொலம்பியாவும் உள்ளன (இவை ஒவ்வொன்றிலிருந்தும் நான்கு வீராங்கனைகள்).
இதில் 48 கிலோ எடை பிரிவில் நேற்று நடைபெற்ற அரையிறுதிச் சுற்றில் இந்தியாவின் நீது, கஜகஸ்தானைச் சேர்ந்த அலுவா பல்கிபெகோவா என்பவரைக் களத்தில் சந்தித்தார். இதில் நீது 5-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதி சுற்றுக்கு முன்னேறினார். சனிக்கிழமை நடைபெறும் இறுதி சுற்றில் நீது, 2022-ம் ஆண்டு ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்ற மங்கோலியாவின் லுட்சைகான் அல்டன் செட்செக்குடன் மோதுகிறார்.
50 கிலோ எடை பிரிவு அரை இறுதி சுற்றில் இந்தியாவின் நிகத் ஜரீன், கொலம்பிய வீராங்கனை இன்க்ரிட் வாலன்சியா என்பவரை எதிர்கொண்டார். இதில் நிகத் ஜரீன் 5-0 என்ற கணக்கில் எளிதாக வென்று இறுதி சுற்றில் நுழைந்தார். ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் நிகத் ஜரீன், இரு முறை ஆசிய சாம்பியனான வியட்நாமின் நு யன் தி டமை எதிர்கொள்கிறார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்தியாவின் லோவ்லினா போர்கோஹெய்ன் (75 கிலோ எடை பிரிவு) அரை இறு சுற்றில், 2018-ம்ஆண்டு உலக சாம்பியனும், இரு முறை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவருமான சீனாவின் லி இயனுடன் மோதுகிறார். மற்றொரு இந்திய வீராங்கனையான சாவீட்டிபோரா (81 கிலோ எடை பிரிவு) அரை இறுதி சுற்றில் ஆஸ்திரேலியாவின் எம்மா-சூ கிரீன்ட்ரீயுடன் பலப்பரீட்சை நடத்துகிறார்.