பலகோடி ரூபாய் பெறுமான குளிர்பான விளம்பர ஒப்பந்தத்தை மறுத்தார் விராட் கோலி

பலகோடி ரூபாய் பெறுமான குளிர்பான விளம்பர ஒப்பந்தத்தை மறுத்தார் விராட் கோலி
Updated on
1 min read

பலகோடி ரூபாய் பெறுமான குளிர்பான விளம்பர ஒப்பந்தத்தை விராட் கோலி வேண்டாம் என்று மறுத்துள்ளார்.

தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு அவர் இந்தத் தகவலை உறுதி செய்த போது, காற்றடைக்கப்பட்ட எந்த ஒரு குளிர் பானத்தையும் தான் அருந்துவதில்லை என்ற காரணத்தினால் இந்த வாய்ப்பை மறுத்ததாகத் தெரிவித்தார்.

கோலி கடைபிடிக்கும் கொள்கைக்கு இது சற்றும் பிசகாமல் உள்ளது. அதாவது தான் எதை மற்றவர்களுக்குக் கூறுகிறோமோ அதை நாம் முதலில் கடைபிடிக்க வேண்டும் என்ற கொள்கைதான் அது.

அவரே ஒருமுறை நிருபர் ஒருவரிடம் கூறும்போது, தன்னால் செய்ய முடியாத ஒன்றை அணி வீரர்களிடம் வலியுறுத்த மாட்டேன்” என்றார்.

“முதலில் ஒன்றை நான் செய்ய முடியும் என்பதை உறுதிப் படுத்திக் கொண்ட பிறகே சகவீரர்களை அதைச் செய்யுமாறு கூறுவேன்” என்று கூறியிருந்தார் விராட் கோலி.

சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பாக தேசிய பாட்மிண்டன் பயிற்சியாளர் பி.கோபிசந்த் இதே போன்ற ஒரு கொள்கையின் அடிப்படையில் மிகப்பெரிய தொகைக்கான விளம்பர ஒப்பந்தத்தைத் துறந்தார்.

அதாவது தான் குளிர்பானம் எதையும் அருந்துவதில்லை என்பதால் அடுத்தவர் பயன்படுத்த பெரிய தொகையைப் பெற்றுக் கொண்டு விளம்பரம் செய்வது நியாயமல்ல என்று கோபிசந்த் கருதினார்.

சாய்னா நெவால், சிந்து, காஷ்யப் ஆகியோரிடம் குளிர்பான விளம்பர ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டாம் என்று தான் ஒரு போதும் கூறியதில்லை, அது அவர்களது தனிப்பட்ட விருப்பத் தெரிவு என்று கூறிய கோபிசந்த், காற்றடைக்கப்பட்ட குளிர்பானம் அருந்த வேண்டாம் என்று அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் எடுத்துரைத்ததாகக் கூறினார்.

தற்செயலாக ஒத்த சிந்தனை படைத்த விராட் கோலியும் கோபிசந்தும் சமீபத்தில் ஆண்டு விளையாட்டு விருதுகளை சேர்ந்து அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in