Published : 23 Mar 2023 11:29 AM
Last Updated : 23 Mar 2023 11:29 AM

ஹர்திக், ஜடேஜாவுக்கு நெருக்கடி கொடுத்த ஸ்மித்தின் கேப்டன்சி: இந்திய அணி சறுக்கியது எங்கே?

சென்னை: சென்னையில் நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவை வீழ்த்தி ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றியுள்ளது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 269 ரன்களை எடுக்க தொடர்ந்து ஆடிய இந்தியா 248 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி தோல்வி கண்டது. தொடரை வென்றதன் மூலம் ஆஸ்திரேலியா ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடம் பிடித்தது.

மூன்று கோல்டன் டக் அடித்த சூர்யகுமாரின் தொடரும் வேதனை: இலக்கை விரட்டும் போது இந்திய அணி 35 ஓவர்கள் முடிவில் 185/4 என்ற நிலையில் விராட் கோலி அரைசதம் எடுத்து ஆடிக்கொண்டிருந்தார். அப்போது இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஆஷ்டன் ஆகர் பந்து வீச வந்தார், அவர் ரவுண்ட் தி விக்கெட்டில் ஒரு பந்தை நல்ல ஆர்க்கில் வீசினார்.

பந்து கோலி எதிர்பார்த்த இடத்தை விட சற்று முன்னதாக லூப் ஆகி விழுந்தது. அதை எக்ஸ்ட்ரா கவரில் தூக்கி அடிக்கும் முயற்சியில் மட்டை உள்பக்கமாகத் திரும்ப பந்து நேராக மிட் ஆஃபில் கேட்ச் ஆக கோலி 72 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்சர் என்று அறுவையான ஒரு இன்னிங்ஸை ஆடி கடைசியில் அவுட் ஆகிவிட்டுச் சென்றார்.

அடுத்ததாக பெரிய எதிர்பார்ப்புடன் சூரிய குமார் யாதவ் இறங்கினார். ஆனால் ஆகர் வீசிய பந்து ஒன்று சறுக்கிக் கொண்டு வர முன்னால் வந்து ஆட வேண்டிய பந்தை பின்னால் சென்று ஆட ஸ்டம்ப்பைப் பதம் பார்த்தது பந்து. தொடர்ந்து 3வது முறையாக இந்தத் தொடரில் முதல் பந்திலேயே அவுட் ஆகி 3 கோல்டன் டக்குகளுக்குச் சொந்தக்காரர் ஆனார். 35.2 ஓவர்களில் 185/6 என்று ஆனவுடன் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கிடுக்கிப்பிடி போட்டார்.

ஜடேஜா செமயாக பிளேடு போட, 20 பந்துகளில் 25 ரன்கள் பக்கம் அடித்திருந்த ஹர்திக் பாண்டியா முடக்கப்பட்டார். இருவரும் சேர்ந்து 50 பந்துகளில் 33 ரன்களை மட்டுமே சேர்த்தனர். அடிக்க முடியாமல் சிக்கித் தவித்த பாண்டியா கடைசியில் 40 பந்துகளில் 40 ரன்கள் என்று ஆடம் ஜம்பாவின் பந்தை வாரிக்கொண்டு அடிக்கப் போய் எட்ஜ் ஆக கேட்ச் ஆகி வெளியேறினார்.

‘சூப்பர் ஸ்டார்’ ரவீந்திர ஜடேஜாவுக்கு ஒன்றுமே மாட்டவில்லை, அவர் மட்டையைச் சுற்றச் சுற்ற மைதான கொசுக்கள்தான் தெறித்து ஓடியதே தவிர பந்து என்னவோ பீல்டர் கைகளைத் தாண்டவே இல்லை. 33 பந்துகளில் 18 ரன்களை மட்டுமே எடுத்து ஜம்பா பந்தில் ஹர்திக் பாண்டியா எப்படி அவுட் ஆனாரோ அதே பாணியில் இடது கையில் ஆட்டமிழந்தார். ஆடம் ஜம்பா 10 ஓவரில் 45 ரன்கள் 4 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.

ஆஷ்டன் ஆகர் 10 ஓவர் 41 ரன் 2 விக்கெட் எடுக்க, மிட்செல் ஸ்டார்க் இன்றைக்கு சாத்துப்படி வாங்கினார். அவர் 10 ஓவரில் 67 ரன்கள் என்று, 5 பவுண்டரிகளையும் 3 சிக்சர்களையும் 6 வைடுகளையும் வீசிசொதப்பினாலும், கடைசியில் சில யார்க்கர்களை குறிவைத்துத் தாக்கினார்.

முகமது சமி 1 பவுண்டரி 1 சிக்ஸ் என்று 10 பந்தில் 14 ரன்கள் என்று சரவெடி காட்டிவிட்டு ஸ்டாய்னிஸ் பந்தை சென்னை பீச்சுக்கு அடிக்கும் முயற்சியில் ஸ்டம்புகளை இழந்தார். கடைசியில் குல்தீப் யாதவ் ரன் அவுட் ஆக இந்திய அணி 49.1 ஓவர்களில் 248 ரன்களுக்குச் சுருண்டது.

முன்னதாக ரோகித் சர்மா தொடக்கத்தில் கடும் ஆக்ரோஷம் காட்டினார். ஜம்பா பந்துவீச்சில் அருமையாக லாங் ஆனில் ஒரு சிக்சரையும், ஸ்டார்க் பந்துவீச்சில் நேராக ஒரு சிக்சரையும் விளாசி 2 பவுண்டரிகளுடன் 17 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து ஸீன் அபாட் பந்தை லேசாக நகர்ந்து வந்து பிக் அப் புல்ஷாட் ஆடப்போய் நேராக குறிபார்த்து ஸ்டார்க் கையில் அடித்து வெளியேறினார்.

ஷுப்மன் கில் ஆடியவரையில் ஸ்டைலிஷாக 4 பவுண்டரி 1 சிக்சர் என்று 49 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து ஜம்பாவின் பந்தை தானே யார்க்கர் ஆக்கிக் கொண்டு எல்.பி.ஆனார். 12.2 ஓவர்களில் 77 ரன்களுக்கு 2 விக்கெட் என்று இருந்த போது கோலி, ராகுல் இணைந்தனர்.

கோலி, ராகுல் படுமந்தமான பேட்டிங்! - கோலியும் ராகுலும் இணைந்த ஆரம்பக்கட்டத்தில் பவுண்டரிகள் வறண்டன, கே.எல்.ராகுல் முதல் 42 பந்துகளில் 18 ரன்களையே எடுத்தார், கடைசியில் 2 பவுண்டரி ஒரு சிக்ஸ் என்று அதிரடி காட்டினார். ஆனாலும் 50 பந்துகளில் 32 ரன்கள் என்பது டெஸ்ட் மேட்சிலேயே இப்போதெல்லாம் மந்தமான பேட்டிங் என்று கருதப்படுகிறது.

சரி இவர்தான் இப்படி என்றால் விரட்டல் மன்னன் விராட் கோலிக்கு பவுண்டரியே வரவில்லை. எப்படியோ 2 பவுண்டரி 1 சிக்சருடன் அவர் 72 பந்துகளில் 54 ரன்களை மந்தகதியில் எடுத்தார். இருவரும் சேர்ந்து 15 ஓவர்களில் வெறும் 69 ரன்களையே சேர்த்தனர். அப்போது ராகுல், ஜம்பா பந்தை தூக்கி அடிக்கும் முயற்சியில் லாங் ஆனில் கேட்ச் ஆகி வெளியேறினார்.

அக்சர் படேலை தவறாக ஹர்திக் பாண்டியா, ஜடேஜா ஆகியோருக்கு முன்பாகவே இறக்கி ரோஹித் சர்மா பெருந்தவறு செய்தார். அவர் 2 ரன்களில் ஸ்மித்தின் அட்டகாசமான ஒரு பீல்டிங்கிற்கு ரன் அவுட் ஆனார். அதன்பிறகுதான் ஆஷ்டன் ஆகர் ஓவரில் கோலி, சூரியகுமார் இருவரும் ஆட்டமிழக்க இந்தியா தோல்வியை நோக்கி பயணித்தது. ஆஸ்திரேலியா வென்றது.

குல்தீப் யாதவ் ஒவ்வொரு முறையும் அட்டகாசமாக வீசுகிறார், ஆனால் அவரை உடனே அணியை விட்டுத் தூக்கி விடுகிறார்கள். முன்னதாக ஆஸ்திரேலியா 10 ஓவர்களில் 68/0 என்ற அதிரடி தொடக்கம் கண்டது, ட்ராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் வெளுத்து வாங்கினர்.

ஆனால் ஹர்திக் பாண்டியா அட்டகாசமாக வீசி மார்ஷ், ஹெட், ஸ்மித் மூவரையும் காலி செய்ய வார்னர், லபுஷேன், அலெக்ஸ் கேரி, ஸ்டாய்னிஸ் ஆகியோர் நன்றாகத் தொடங்கி விட்டு குல்தீப் யாதவ் மற்றும் அக்சர் படேலிடம் அனாவசியமான ஷாட்களில் அவுட் ஆகினர். 74/1 என்று இருந்த ஆஸ்திரேலியா 269 ரன்களையே எடுக்க முடிந்தது. ஆட்ட நாயகனாக ஆடம் ஜம்பா தேர்வு செய்யப்பட்டார். தொடர் நாயகனாக மிட்செல் மார்ஷ் தேர்வு செய்யப்பட்டார்.

ஸ்மித்தின் கேப்டன்சிக்கும் ரோஹித் சர்மாவின் கேப்டன்சிக்கும் அட்டாக்கிங் என்ற விதத்தில் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் உள்ளது. ஸ்மித் விட்டுக்கொடுக்காமல் கேப்டன்சி செய்தார். ஒரு கட்டத்தில் ஹர்திக் பாண்டியா பேட் செய்த போது பீல்டர்களை உள்ளே கொண்டு வந்து நெருக்கடி கொடுத்தார், ஒன்று தூக்கி அடி இல்லையேல் அவுட் ஆகு என்பது போல் பீல்டிங் செட்-அப்.

அந்த பிரஷரில்தான் பாண்டியா, ஜடேஜா இருவரும் ஆட்டமிழந்தனர், அதே பிரஷரில்தான் கோலியும், சூர்யகுமாரும் ஆட்டமிழந்தனர், இதே பிரஷரில்தான் கே.எல்.ராகுலையும் கட்டிப்போட்டார். ஜம்பா, ஆகர், அபாட், ஸ்டாய்னிஸ் என்று அனைவரையும் அட்டகாசமாகப் பயன்படுத்தினார். ஸ்மித்தின் கேப்டன்சிக்குக் கிடைத்த வெற்றியே இது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x