

இந்தியாவில் முழுக்க நடைபெறும் 2023 ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பைப் போட்டிகள் அக்டோபர் 5ம் தேதி தொடங்கி நவம்பர் 19-ம் தேதி வரை நடைபெறலாம் என்று தெரிகிறது. இந்த உலகக் கோப்பையில் 10 அணிகள் பங்கேற்கின்றன. இதற்காக 11 மைதானங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இறுதிப் போட்டி உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான அகமதாபாத்தில் நடைபெறுகின்றது.
மேலும், பெங்களூரு, சென்னை, டெல்லி, தரம்சலா, குவஹாட்டி, ஹைதராபாத், கொல்கத்தா, லக்னோ, இந்தூர், ராஜ்கோட் மற்றும் மும்பை மைதானங்களில் நடைபெறலாம் என்று ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ தகவல்கள் தெரிவிக்கின்றன. 46 நாட்களில் 3 நாக் அவுட் போட்டிகளுடன் 48 போட்டிகள் மொத்தமாக நடைபெறவிருக்கின்றன.
இறுதிப் போட்டி தவிர மீதி போட்டிகள் எந்தெந்த மைதானத்தில் என்பதை பிசிசிஐ இன்னும் வெளியிடவில்லை. பருவ மழை காரணமாக போட்டிகள் நடைபெறும் மைதானங்களை முடிவு செய்வதில் தாமதமாகியுள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு காலக்கட்டத்தில் பருவ மழை தொடங்குகின்றது; முடிவடைகின்றது. எனவே இந்தச் சிக்கல்களினால் மைதானங்களை இறுதிப்படுத்த முடியவில்லை என்று தெரிகிறது.
பொதுவாக இந்நேரத்திற்கு ஐசிசி போட்டி அட்டவணையை அறிவித்திருக்கும். ஆனால் இம்முறை பிசிசிஐ அரசிடமிருந்து தேவையான அனுமதிகளைப் பெறக் காத்திருக்கிறது. இரண்டு முக்கிய விஷயங்கள் இதில் அடங்கியுள்ளன. முதல் முக்கிய விஷயம் ஒட்டுமொத்த உலகக்கோப்பைத் தொடருக்கும் வரிவிலக்குக் கோருவதாகும். பாகிஸ்தான் அணி இங்கு வர விசா அனுமதிகள் தெளிவுபடுத்தப்பட வேண்டும்.
ஐசிசியுடனான ஒப்பந்தங்களின் படி ஐசிசி மற்றும் அதன் வர்த்தகக் கூட்டாளிகளுக்கு பிசிசிஐ வரிவிலக்கு பெற்றுத்தர வேண்டும். 2023 உலகக்கோப்பை ஒளிபரப்பு வருவாயில் 20% வரி விதிக்கப்படும் என்று கடந்த ஆண்டு வரி ஆணையம் ஐசிசியிடம் தெரிவித்திருந்தது.
ஐசிசியின் ஒளிபரப்பு வருவாய் 2023 உலகக் கோப்பை மூலம் 533.29 மில்லியன் டாலர்கள் என்று உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதில் 116.47 மில்லியன் டாலர்கள் வரிவிதிப்பாக இருக்கலாம் என்று கருதப்படுகின்றது.