Last Updated : 22 Sep, 2017 06:01 PM

 

Published : 22 Sep 2017 06:01 PM
Last Updated : 22 Sep 2017 06:01 PM

இந்திய யு-17 உலகக்கோப்பை கால்பந்து அணியின் தனித்துவம்- ஏழ்மையை எதிர்கொண்டு மீளும் மகத்தான வீரர்கள்!

அக்டோபர் 6 முதல் 28-ம் தேதி வரை ஃபிபா அண்டர் 17 உலகக்கோப்பை கால்பந்து இந்தியாவில் நடைபெறுகிறது. இதற்கான இந்திய அணியில் ஏழ்மைப் பின்னணியிலுள்ள வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் முதல் முறையாக இந்த உலகக்கோப்பை கால்பந்து நடைபெறுகிறது.

சிக்கிமிலிருந்து தையல்காரர் மகன், மணிப்பூரிலிருந்து ஆசாரியின் மகன், இன்னொரு பெங்களூரு வீரரின் தாயார் நடைபாதை வியாபாரி ஆவார். மேலும் சில வீரர்களும் மிகவும் சாதாரண பின்னணியிலிருந்து கால்பந்து மீதான நேயத்தினால் போராடி அணிக்குள் நுழைந்துள்ளனர்.

இந்த ஏழ்மைப் பின்னணியிலிருந்து இந்த வீரர்கள் வந்தாலும் உலகின் பெரிய கால்பந்து தொடரில் நாட்டுக்காக விளையாடும் கனவு நிறைவேறியுள்ளதாக இந்த இளம் வீரர்கள் பெருமையடைந்துள்ளனர்.

சிக்கிமைச் சேர்ந்த கோமல் தாட்டல் என்ற 17 வயது வீரர், சிறுவயது முதல் கால்பந்து ஆடி வருபவர், ஆனால் கால்பந்து வாங்க பணம் ஏது? பிளாஸ்டிக் உள்ளிட்ட பிற பொருட்களைச் சேர்த்த்து தானாகவே உருவாக்கிய பந்தில் கால்பந்து விளையாடி பயிற்சி பெற்றுள்ளார்.

“என்னுடைய பெற்றோர் தையில் தொழில் புரிபவர்கல், எங்கள் சொந்த ஊரில் சிறு தையல் கடை வைத்துள்ளோம். சிறுபிராயத்தில் துணி அல்லது பிளாஸ்டிக்கினால் ஆன உருண்டியான பொருளில் கால்பந்து ஆடுவேன்” என்று கோவாவில் பயிற்சியினிடையே பிடிஐ செய்தி நிறுவனத்திற்குக் கூறுகிறார் கோமல்.

தங்களது குறைந்த வருவாயிலும் மகன் கோமலுக்காக தந்தை அருண் குமாரும், தாய் சுமித்திராவும் சிறு சேமிப்புகள் செய்து கால்பந்துக்குத் தேவையான உடைகள், காலணிகள் மற்றும் ஒரு கால்பந்து ஆகியவற்றை வாங்கிக் கொடுத்துள்ளனர்.

நம்பர் 10 ஜெர்சியை அணிந்திருக்கும் கோமல், “என் பெற்றோருக்கு எனக்கு செலவு செய்வது கடினம், ஆனாலும் ஆதரவு காட்டினர், என்னுடைய நண்பர்களில் சிலர் பணமுள்ளவர்கள் அவர்களும் எனக்கு உதவி புரிந்தனர்” என்றார்.

கோமல் தாட்டல் உள்ளூர் பள்ளியிலிருந்து 2011-ல் நாம்ச்சி ஸ்போர்ட்ஸ் அகாடமிக்கு வந்தார். இவரது திறமைகளைப் பார்த்த அகாடமியின் தலைமைப் பயிற்சியாளர் அண்டர்-17 உலகக்கோப்பைக்கான திறமைகளைத் தேடிக்கொண்டிருந்த கோவாவுக்கு 2014ல் அனுப்பினார்.

கோவாவில் நடந்த பிரிக்ஸ் கோப்பையில் கோமல் பெயர் புகழடைந்தது. அந்தப் போட்டியில் பிரேசிலுக்கு எதிராக இந்திய அணி 1-3 என்று தோற்றாலும் அந்த ஒரு கோலை அபாரமாக அடித்தவர் கோமல் தாட்டல்.

அணியில் தேர்வுசெய்யப்பட்ட இன்னொரு ஏழ்மைப் பின்னணி கொண்ட அமர்ஜித் சிங் கியாம், மணிப்பூரைச் சேர்ந்தவர். இவர் அண்டர் 17 அணியின் கேப்டனாக வாய்ப்புள்ள வீரராவார்.

அமர்ஜித் சிங் தந்தை சந்த்ரமணி சிங் கியாம், இவர் விவசாயம் மற்றும் ஆசாரி தொழில் பார்ப்பவர். தாயார் ஆஷாங்பி தேவி தலைநகர் இம்பாலில் மீன் விற்பவர்.

“என் தந்தை எனக்கு கால்பந்து ஆட முழு சுதந்திரம் அளித்தார், என் இதயத்தின் ஆசையை பின் தொடர அவர் அனுமதி அளித்தார்” என்கிறார் நெகிழ்ச்சியுடன் இந்த எதிர்கால இந்தியக் கால்பந்து கேப்டன் அமர்ஜித் சிங்.

16 வயது அமர்ஜித் சிங் 2010-ல் உள்ளூர் பள்ளியில் கால்பந்து மீது காதல் கொண்டார். சண்டிகர் வந்து கால்பந்து அகாடமியில் சேர்ந்தார்.

அகாடமி அமர்ஜித் சிங்கை நன்றாக பராமரித்தது. இலவச தங்குமிடம் உணவு, கல்விக்கான செலவுகளை அகாடமி எடுத்துக் கொண்டதால் அமர்ஜித் பெற்றோரின் சுமை குறைந்தது.

நடுக்கள வீரரான அமர்ஜித் சிங், 2015-ல் கோவாவில் ஒரு ஆட்டத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

பிறகு சஞ்சீ ஸ்டாலின் என்ற இளம் வீரர், இவரது தாயார் பரமேஸ்வரி, பெங்களூரு நடைபாதையில் துணிமணிகள் விற்பவர்.

சஞ்சீவ் ஸ்டாலினும் சண்டிகர் கால்பந்து அகாடமியில் இணைந்து 7 ஆண்டுகள் அங்கு பயிற்சி பெற்று தற்போது கோவாவில் ஏஐஎப்எப் முகாமில் உலகக்கோப்பைக்காக பயிற்சி பெற்று வருகிறார்.

இனி சஞ்சய் ஸ்டாலின் வார்த்தைகளில், “தினமும் என் தந்தை ஏதாவதொரு வேலைகுச் சென்று விடுவார், என் தாயார் நடைபாதையில் என் தாய்மாமனுடன் சேர்ந்து துணிமணிகள் விற்று வருகிறார். இதுதான் எங்கள் குடும்பத்தின் வருமானம். குடும்பத்துக்கு பணம் எப்படி வருகிறது என்ற கவலையில்லாமல் நான் கால்பந்து ஆடி வந்தேன். ஆனால் இப்போது புரிகிறது, நாள் முழுதும் கால் கடுக்க நின்று அவர்கள் துணி விற்பதைப் பார்த்து வருகிறேன். இத்தனை கடினப்பாடுகளிலும் என் முகத்தில் சிரிப்பைப் பார்க்கவே அவர்கள் பாடுபடுகின்றனர்” என்றார். இவர் இந்திய அணியின் தடுப்புச் சுவர்களுள் ஒருவர்.

மற்ற வீரர்களில் சிலரும் மிகவும் சாதாரண பொருளாதாரப் பின்னணி கொண்டவர்களே. நடுக்கள வீரர் குமந்தம் நிங்தோய்ங்கம்பாவின் தாயார் இம்பாலில் மீன் விற்பவர். கொல்கத்தாவைச் சேர்ந்த மற்றொரு வீரர் ஜிதேந்திர சிங்கின் தந்தை வாட்ச்மேனாகவும் தாயார் டெய்லராகவும் இருந்து வருகின்றனர்

அமர்ஜித் சிங் கூறும்போது, “ஒருநாள் நாட்டுக்காக ஆடுவேன் என்று நான் நினைத்துக் கொள்வேன், இன்று அண்டர்-17 அணியில் இருக்கிறேன் என்னால் இன்னமும் கூட நம்ப முடியவில்லை, கனவு போல்தான் உள்ளது” என்றார்.

சஞ்சீவ் ஸ்டாலின், “இந்தியக் கால்பந்தாட்டத்தில் நாட்டுக்காக பெரிய சாதனைகளை படைப்பேன் என்று என் பெற்றோர் மிகுந்த நம்பிக்கைக் கொண்டுள்ளனர்.

அதனால்தான் நான் சண்டிகர் கால்பந்து அகாடமியில் 7 ஆண்டுகள் காலம் தள்ளினேன். ஆண்டுக்கு ஒருமுறைதான் பெற்றோரைப் பார்க்கிறேன்” என்றார்.

சிக்கிம் வீரர் கோமல் தாட்டல் மிக அழகாக சுருக்கிக் கூறும்போது, “ஒவ்வொரு கால்பந்து வீரரும் மூத்த இந்திய அணியில் ஆட வேண்டும் என்றே விரும்புவார்கள். எங்களைப் பொறுத்தவரை இப்போது அண்டர்-17 உலகக்கோப்பை, இதில்தான் இப்போது கவனம் முழுதும். நாங்கள் 100% பங்களிப்பு செய்து நாட்டுக்குப் பெருமை சேர்ப்போம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x