

சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியும், தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் டிவில்லியர்ஸும் தான் விக்கெட்டுகளுக்கு இடையே ஓடுவதில் சிறந்தவர்கள் என இந்திய அணி வீரர் விராட் கோலி தெரிவித்துள்ளார். டிவில்லியர்ஸின் ‘360 ஷோ’ யூடியூப் வீடியோவில் கோலி இதனை பகிர்ந்துள்ளார்.
“களத்தில் நான் பேட் செய்யும்போது ரன் எடுக்க டிவில்லியர்ஸ் மற்றும் தோனியை அழைக்க வேண்டிய அவசியம் கூட எனக்கு தேவைப்படாது. ஏனெனில் எங்களுக்குள் அப்படியொரு புரிதல் இருக்கிறது. விக்கெட்டுகளுக்கு இடையே அதிவேகமாக ஓடுவதில் டிவில்லியர்ஸும், தோனியும் ஆகச் சிறந்தவர்கள். அது குறித்து கேட்க வேண்டியதே இல்லை.
களத்தில் எனக்கு கிடைத்த சூழல் (Atmosphere) சார்ந்த சிறந்த அனுபவம் என்றால் அது 2011 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டி, 2022 டி20 உலகக் கோப்பை தொடரில் மெல்பேர்னில் நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி மற்றும் ஐபிஎல் 2016 இறுதிப் போட்டியும் தான்” என கோலி தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோவில் தன் மனைவி அனுஷ்கா சர்மா உடனான ஆரம்ப நிலை சந்திப்பு எப்படி இருந்தது என்பது குறித்தும், ஆஸ்திரேலிய வீரர்கள் களத்தில் கடுமையான சவால் கொடுப்பது குறித்தும், விக்கெட்டுகளுக்கு இடையே ஓடுவதில் இந்திய வீரர் புஜாரா மோசம் என வேடிக்கையுடன் கோலி தனது கருத்துகளை பகிர்ந்துள்ளார். வீடியோ லிங்க்..