

சென்னை: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை (புதன்கிழமை) சென்னை - சேப்பாக்கத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்தப் போட்டியை காண வரும் பார்வையாளர்களுக்காக இலவச சிற்றுந்து வசதியை ஏற்பாடு செய்துள்ளது சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம். இதுதொடர்பாக வெளியாகி உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது . இந்த போட்டியை காண ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் வருகை தருவார்கள். இதற்காகவே சென்னை மெட்ரோ ரயில் நிலையமான அரசினர் தோட்டம் முதல் சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானம் வரை இலவசமாக சிற்றுந்து சேவை வசதியை நாளை காலை 11:00 மணி முதல் கிரிக்கெட் போட்டி முடியும் வரை கிரிக்கெட் ரசிகர்களுக்காகவே செய்துள்ளது.
மேலும், நாளை (மார்ச் 22) மட்டும் மெட்ரோ ரயில் சேவை நெரிசல்மிகு நேரமான மாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை உள்ள நெரிசல்மிகு நேரத்தை இரவு 10:00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த தருணத்தில், சென்னை மெட்ரோ ரயில் வாகன நிறுத்தும் இடங்களை பயன்படுத்திக்கொள்ளலாம். சென்னை பெருநகர மக்களும், கிரிக்கெட் ரசிகர்களும், பொதுமக்களும், மெட்ரோ ரயில் நிர்வாகம் செய்துள்ள இந்த வசதிகளை பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.