BAN vs IRE | முஷ்பிகுர் ரஹீமின் அதிவேக ஒருநாள் சதம்!
அயர்லாந்துக்கு எதிராக வங்கதேசம் ஆடிய 2-வது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முஷ்பிகுர் ரஹிம், 60 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் வங்கதேச அணி சார்பில் அதிவேக ஒருநாள் சத சாதனையை நிகழ்த்தினார். ஆனால், மழை காரணமாக அந்தப் போட்டி தொடர்ந்து நடைபெறாமல் எத்தரப்பிற்கும் வெற்றி தோல்வி இன்றி முடிவடைந்தது.
சில்ஹெட்டில் நடைபெற்ற இந்தப் போட்டியில் வங்கதேசம், 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு, 349 ரன்கள் எடுத்தது. இது ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் வங்கதேச அணியின் அதிகபட்ச ரன்களாகும். இதே அயர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 338 ரன்களை எடுத்திருந்தது. இப்போது அதனை தகர்த்து புதிய சாதனை படைத்தது.
முஷ்பிகுர் ரஹிம் கடைசி ஓவரின் கடைசி பந்தில் துரித சிங்கிள் ஒன்றை ஓடி ஷாகிப் அல் ஹசனின் 63 பந்து சத சாதனையை முறியடித்து புதிய சாதனையைப் படைத்தார். ஷாகிப் அல் ஹசன் 2009-ல் ஜிம்பாப்வேவுக்கு எதிராக அதிவேக சத சாதனையைப் படைத்தது குறிப்பிடத்தக்கது.
இந்த இன்னிங்ஸில் முஷ்பிகுர் ரஹிம் 7,000 ரன்கள் மைல்கல்லையும் கடந்தார். 60 பந்துகளில் 100 ரன்களை எடுக்க 14 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் உதவின. இரண்டு சிக்சர்களில் ஒன்று டீப் பாயிண்டிற்கு மேலும், இன்னொன்று லாங் ஆஃபுக்கு மேலும் அடிக்கப்பட்டது. இந்த இன்னிங்ஸின் விசேஷம் என்னவெனில் 34-வது ஓவரில்தான் முஷ்பிகுர் ரஹிம் பேட் செய்ய களம் இறங்கினார். இந்த ஓவரில் இறங்கி வங்கதேச வீரர் ஒருவர் அடிக்கும் முதல் அதிவேக சதமாகும் இது.
முன்னதாக, நஜ்முல் ஷாண்டோ மற்றும் லிட்டன் தாஸ் ஆகியோர் முறையே 73 மற்றும் 70 ரன்கள் என்று அதிரடி அரைசதங்களை விளாசினர். முஷ்பிகுர் ரஹீமும், தவ்ஹித் ஹிருதய் (49) என்ற வீரரும் சேர்ந்து 78 பந்துகளில் 128 ரன்களை விளாசினர். வங்கதேச ஒருநாள் வரலாற்றில் அதிவேக சதக் கூட்டணியாக இது அமைந்தது.
ஹிருதய் அவுட் ஆகும் போது 47-வது ஓவரில் முஷ்பிகுர் ரஹிம் 78 ரன்களில்தான் இருந்தார். 48 மற்றும் 49-வது ஓவரில் இரண்டு பவுண்டரிகளை அடித்தார். பிறகு கடைசி ஓவரில் கடைசி 4 பந்துகளில் முஷ்பிகுர் ரஹிம் சத சாதனைக்கு 9 ரன்கள் தேவையாக இருந்தது. அதையும் எடுத்து அதிவேக சத சாதனையை படைத்தார். கடைசி 10 ஓவர்களில் 108 ரன்களை விளாசியதில் முஷ்பிகுர் பங்குதான் அதிகம்.
இதற்கு முன்னர் முஷ்பிகுர் ரஹிம், 69 பந்துகளில் சதம் பதிவு செய்துள்ளார். அது வலுவான பாகிஸ்தான் பந்து வீச்சுக்கு எதிராக கடந்த 2015-ல் அடித்தது என்பது கவனிக்கத்தக்கது.
349 ரன்களை வங்கதேசம் எடுத்த நிலையில் மழை குறுக்கிட ஆட்டம் கைவிடப்பட்டது. போட்டி வெற்றி தோல்வியின்றி முஷ்பிகுர் ரஹிம் சத சாதனையும் வெற்றியில் முடியாமல் விரயமாகிப் போனது.
