ராணி ராம்பால் பெயரில் ஹாக்கி மைதானம்: இவ்வித கவுரம் பெறும் முதல் இந்திய வீராங்கனை!

மைதான திறப்பு விழாவில் ராணி ராம்பால்
மைதான திறப்பு விழாவில் ராணி ராம்பால்
Updated on
1 min read

ரேபரேலி: இந்திய ஹாக்கி அணி வீராங்கனை ராணி ராம்பால் பெயர் ஹாக்கி மைதானம் ஒன்றுக்கு சூட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் இவ்வித கவுரவத்தை பெற்றுள்ள முதல் வீராங்கனையாகியுள்ளார் அவர். உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி பகுதியில் அமைந்துள்ள MCF ரேபரேலி மைதானம்தான் இப்போது அவரது பெயரில் மாற்றப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவில் அவர் பங்கேற்றிருந்தார்.

“ஹாக்கி விளையாட்டில் எனது பங்களிப்பை சிறப்பிக்கும் வகையில் MCF ரேபரேலி ஹாக்கி மைதானத்தை ‘ராணி'ஸ் கேர்ள்ஸ் ஹாக்கி டர்ஃப்’ என்று மறுபெயரிட்டதை நான் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சியையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த உணர்வை வெளிப்படுத்த எனக்கு வார்த்தைகள் போதவில்லை.

இது எனக்கு மிகவும் பெருமையான மற்றும் உணர்வுபூர்வமான தருணம். ஏனெனில், ஹாக்கி வீராங்கனைகளில் முதன்முதலில் தன் பெயரில் மைதானம் கொண்டுள்ள வீராங்கனை நான்தான். இதனை இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு சமர்பிக்கிறேன். வளர்ந்து வரும் அடுத்த தலைமுறையை சேர்ந்த ஹாக்கி வீராங்கனைகளுக்கு இது ஊக்கம் கொடுக்கும் என நான் நம்புகிறேன்” என ராணி ராம்பால் தெரிவித்துள்ளார்.

2009 முதல் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார் 28 வயதான ராணி ராம்பால். 254 போட்டிகளில் விளையாடி 120 கோல்களை பதிவு செய்துள்ளார். இந்திய மகளிர் அணி சார்பில் அதிக கோல்களை பதிவு செய்த வீராங்கனையாக அவர் அறியப்படுகிறது. ஆசிய விளையாட்டு, ஆசிய கோப்பை, ஆசிய சாம்பியன்ஸ் டிராபி, தெற்காசிய விளையாட்டு, இளையோர் உலகக் கோப்பை போன்ற முக்கிய தொடர்களில் பதக்கம் வென்ற இந்திய அணியில் அவர் அங்கம் வகித்துள்ளார். காயம் காரணமாக கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் அவர் பங்கேற்கவில்லை. அண்மையில் அணிக்குள் அவர் கம்பேக் கொடுத்திருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in