

மும்பை: நடப்பு மகளிர் ப்ரீமியர் லீக் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு மூன்றாவது அணியாக முன்னேறியுள்ளது யூபி வாரியர்ஸ் அணி. அதன் காரணமாக முதல் சுற்றோடு நடையை கட்டுகிறது குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.
பிளே ஆஃப் சுற்றுக்கு மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடல்ஸ் மற்றும் யூபி வாரியர்ஸ் அணிகள் முன்னேறியுள்ளன. இருந்தாலும் முதல் இரண்டு இடங்களை எந்த அணி பிடிக்கிறது என்பது லீக் சுற்று போட்டிகள் முடிவுக்கு பிறகே தெரியவரும். தற்போது புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் உள்ள மும்பை மற்றும் டெல்லி அணிகள் விளையாடி வருகின்றன.
இந்த தொடரின் 17-வது லீக் போட்டியில் குஜராத் மற்றும் யூபி அணிகளுக்கு இடையிலான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது. 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை யூபி விரட்டியது. 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 39 ரன்கள் எடுத்து அந்த அணி தடுமாறியது.
அதன் பின்னர் மெக்ரத் மற்றும் கிரேஸ் ஹாரிஸ் இணைந்து இன்னிங்ஸில் வேகத்தை கூட்டினர். 38 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து மெக்ரத் அவுட் ஆனார். தொடர்ந்து தீப்தி, 6 ரன்களில் விக்கெட்டை இழந்தார். கிரேஸ் ஹாரிஸ், 41 பந்துகளில் 72 ரன்கள் எடுத்து வெளியேறினார். அணியை வெற்றி கோட்டுக்கு அருகே அழைத்து சென்று விக்கெட்டை அவர் இழந்திருந்தா.
19.5 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது யூபி அணி. இதன் மூலம் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது அந்த அணி.