

பிஎன்பி பரிபாஸ் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோஹண் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேட் எப்டன் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள இந்தியன் வெல்ஸ் நகரில் பிஎன்பி பரிபாஸ் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆடவர் இரட்டையர் இறுதிப் போட்டியில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா-மேட் எப்டன்ஜோடியும், நெதர்லாந்தின் வெஸ்லிகூல்ஹாஃப்-பிரிட்டனின் நீல் ஸ்பக்ஸ்கி ஜோடியும் மோதின.
இதில் போபண்ணா-எப்டன் ஜோடி 6-3, 2-6, 10-8 என்ற செட் கணக்கில் வெஸ்லி-நீல் ஸ்பக்ஸ்கி ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இதன்மூலம் ஏடிபிமாஸ்டர்ஸ் 1000 ரக போட்டிகளில் மிக அதிக வயதில் (43 வயது)பட்டம் வென்றவர் என்ற பெருமையை ரோஹன் போபண்ணா பெற்றுள்ளார்.
இதுகுறித்து ரோஹன் போபண்ணா கூறியதாவது:
இந்த போட்டி உண்மையிலேயே எனக்கு சிறப்பானதாக அமைந்திருந்தது. இதனால்தான் இந்த பிஎன்பி பரிபாஸ் ஓபன் டென்னிஸ் போட்டியை, டென்னிஸின் சொர்க்கம் என்று சொல்கின்றனர்.
நான் இங்கு இதுவரை 10 ஏடிபிமாஸ்டர்ஸ் 1000 இறுதிப் போட்டிகளில் விளையாடியுள்ளேன். எப்டனுடன் இணைந்து இங்குபட்டம் வென்றதை மிகவும் மகிழ்வாக உணர்கிறேன்.
இந்தப் போட்டியின்போது சிலகடினமான ஆட்டங்களில் விளையாடினோம். இறுதிப் போட்டியில்மிகவும் சிறப்பான ஜோடியைவீழ்த்தி கோப்பையை வென்றுள்ளது மகிழ்ச்சி. இவ்வாறு ரோஹன் போபண்ணா கூறினார்.
2015-ம் ஆண்டில் சின்சினாட்டி மாஸ்டர்ஸ் போட்டியில் கனடா வீரர்டேனியல் நெஸ்டர் தனது 42-வதுவயதில் பட்டம் வென்றார். தற்போது ரோஹன் போபண்ணா 43-வது வயதில் பட்டம் வென்று அந்த சாதனையைத் தகர்த்துள்ளார்.