ஆசிய இளையோர் தடகள போட்டியில் தங்கம் வெல்வதே இலக்கு: தி.மலை மாணவர் கு.யுவராஜ் சூளுரை

மாணவர் கு.யுவராஜ்
மாணவர் கு.யுவராஜ்
Updated on
2 min read

திருவண்ணாமலை: உஸ்பெகிஸ்தான் நாட்டில் ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஆசிய இளையோர் தடகள போட்டியின் மும்முறை தாண்டுதலில் தங்கம் வெல்வதே இலக்கு என திருவண்ணாமலை மாணவர் கு.யுவராஜ் சூளுரைத்துள்ளார்.

“களத்தில் இரு, பார்வையாளராக இருக்காதே” என்பார்கள். இந்த வாக்கியத்துக்கு எடுத்துக்காட்டாக, களத்தில் புள்ளிமானாக துள்ளி குதித்து ஆசிய அளவில் சாதனை படைப்பதில் முனைப்பு காட்டி வருகிறார் அக்னி பூமியின் மாணவர். அவரது பெயர் ‘யுவராஜ்’. திருவண்ணாமலை அருகே பாலியப்பட்டு கிராமத்தில் வசிப்பவர். இவரது தந்தை பெயர் குமார். காய்கறி வியாபாரி. தாய் மலர், பசுமாடுகளை பராமரித்து வருகிறார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த யுவராஜ், மும்முறை தாண்டுதலில், உஸ்பெகிஸ்தான் நாட்டில் தாஷ்கண்ட் நகரில் ஏப்ரல் 27 முதல் 30-ம் தேதி வரை நடைபெற உள்ள 5-வது ஆசிய இளையோர் தடகள போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க உள்ளார்.

ஆசிய தடகள போட்டிக்கு தயாராகி வரும் மாணவர் யுவராஜ் கூறும்போது, “சிறு வயதில் கிராமத்தில் ஓடிய நான், பள்ளிக்கு சென்றதும் மைதானத்தில் ஓடத்தொடங்கினேன். பத்தாம் வகுப்பு வரை, பள்ளி அளவிலான ஓட்டத்தில் பங்கேற்று வந்த நான், பின்னர் மும்முறை தாண்டுதல் போட்டியில் கவனம் செலுத்த தொடங்கினேன். எனது முயற்சிக்கு பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர்கள் ரமேஷ், பிரபாகரன், வேதமாணிக்கம் ஆகியோர் துணையாக இருந்து வழிகாட்டி வருகின்றனர். இவர்களது பயிற்சி மற்றும் இவர்கள் அளித்த உத்வேகம் எதிரொலியாக, பள்ளிகளுக்கு இடையே மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டியில் முதல் பரிசு பெற்றேன். பின்னர், சென்னையில் நடைபெற்ற மாநில இளையோர் போட்டியில் வெண்கல பதக்கம் பெற்றேன். இதையடுத்து, கர்நாடக மாநிலம் உடுப்பியில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு நடைபெற்ற 18-வது தேசிய இளையோர் போட்டியில் தங்க பதக்கம் வென்று, உஸ்பெகிஸ்தான் நாட்டில் நடைபெற உள்ள ஆசிய இளையோர் தடகள போட்டியில் (18 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில்), இந்தியா சார்பில் பங்கேற்க உள்ளேன்.

முதன்முறையாக தங்கம் வென்றுள்ளது எனது பெற்றோர், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகத்தினர் உள்ளிட்டோர் மகிழ்ச்சி அடைந்தனர். ஆசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது குறித்து கிராம மக்கள் மற்றும் உறவினர் ஆகியோர் கேட்கும் போது, பெருமையாக இருக்கிறது என தந்தையும், தாயும் கூறுகின்றனர். மாநில அளவிலான போட்டியில் 13.60 மீட்டரும், தேசிய அளவிலான போட்டியில் 14.26 மீட்டர் தொலைவு தாண்டியுள்ளேன். 15 மீட்டர் தொலைவு தாண்ட வேண்டும் என இலக்கு நிர்ணயித்து பயிற்சி பெற்று வருகிறேன். தினசரி காலை மற்றும் மாலை என 5 மணி நேரம் பயிற்சியில் ஈடுபட்டுள்ளேன். பிளஸ் 2 படித்து வருவதால், பொதுத் தேர்வு முடிந்ததும், ஆசிய அளவிலான போட்டியில் பங்கேற்பதற்காக 20 நாட்கள் நடைபெற உள்ள பயிற்சி முகாமில் பங்கேற்க உள்ளேன்.பொருளாதார சூழ்நிலையை உணர்ந்து, நான் படித்து வரும் விடிஎஸ் ஜெயின் நிதி உதவி பெறும் பள்ளியின் நிர்வாகம், பிரத்யேக ஷு மற்றும் சீருடைகளை வாங்கிக் கொடுத்து உதவி செய்துள்ளது. மேலும், பிளஸ் 2 தேர்வு பாதிக்கக்கூடாது என்பதற்காக உடுப்பியில் இருந்து சென்னை வரை விரைவாக வந்து சேர்வதற்காக விமான டிக்கெட் பெற்று கொடுத்து உதவியது. மேலும், உஸ்பெகிஸ்தான் நாட்டுக்கு செல்ல பாஸ்போர்ட் பெற்று தரவும் முன் வந்துள்ளது. எனக்கு அனைத்து உதவிகளையும் பள்ளி நிர்வாகம் செய்து வருகிறது. ஆசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது, எனது வாழ்வில் திருப்புமுனை என உடற்கல்வி ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். ஆசிய போட்டியில் தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்ப்பேன். பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்று, விளையாட்டு கல்லூரியில் படிக்க விருப்பம் உள்ளது” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in