Published : 19 Mar 2023 04:46 AM
Last Updated : 19 Mar 2023 04:46 AM
விசாகப்பட்டினம்: இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்று ஒரு நாள் தொடரைக் கைப்பற்ற இந்திய அணியினர் தீவிரமாக உள்ளனர்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. 4 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இதையடுத்து மும்பையில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஒரு நாள் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் 2-வது ஆட்டம் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெறவுள்ளது.
முதல் ஆட்டத்தில் சிறப்பாக பந்துவீசிய போதும் இந்திய அணி பேட்டிங்கில் தடுமாறியது. இஷன் கிஷன், ஷுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், விராட் கோலி ஆகியோர் எதிர்பார்த்த அளவுக்கு சோபிக்கவில்லை. நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நாள் போட்டியில் களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா சிறப்பாக விளையாடினார். அதைப் போலவே தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கே.எல்.ராகுல் சிறப்பானதொரு இன்னிங்ஸை விளையாடி கடைசிவரை ஆட்டமிழக்காமல் நின்று அணிக்கு வெற்றி தேடித்தந்தார்.
எனவே ஜடேஜா, ராகுல் ஆகியோரிடமிருந்து மீண்டும் ஒருஉயர்மட்டத் திறன் 2-வது ஆட்டத்திலும் வெளிப்படக்கூடும். இந்தப் போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா அணிக்குத் திரும்புகிறார். கேப்டன் ரோஹித், ஆல்- ரவுண்டர் ஹர்திக் பாண்டியா ஆகியோர் சிறப்பாக விளையாடும்பட்சத்தில் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு எளிதாகும்.
அதேபோல், முதல் போட்டியின்போது பவுலிங்கில் மொகமது ஷமி, மொகமது சிராஜ், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகியோர் அபாரமாக செயல்பட்டனர். 2-வது போட்டியிலும் இவர்களிடமிருந்து மிகச் சிறந்த திறன் வெளிப்படக்கூடும். எனவே 2-வது போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்றும் முயற்சியில் இந்திய அணியினர் தீவிரமாக உள்ளனர்.
அதே நேரத்தில் முதல் போட்டியில் தோற்றதற்கு பழிவாங்கும் நோக்கில் ஆஸ்திரேலிய அணி களமிறங்குகிறது. முதல் போட்டியில் சிறப்பாக விளையாடிய மிட்செல் மார்ஷிடமிருந்து மற்றுமொரு அருமையான இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும். மேலும் டிராவிஸ் ஹெட், கேப்டன் ஸ்மித், லபுஷேன், ஜோஷ் இங்லிஸ், கேமரூன் கிரீன், கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் அணிக்கு பலம் சேர்க்கின்றனர்.
பவுலிங்கில் மிட்செல் ஸ்டார்க், மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் ஆகியோர் இந்திய அணியினரை மிரட்டக்கூடும்.
நேரம்: பிற்பகல் 1.30.
நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT