

மும்பை: ஒருநாள் கிரிக்கெட் போட்டியை மேம்படுத்த இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் புதிய யோசனை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனியார் நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: தற்போது நடத்தப்பட்டு வரும் ஒருநாள் கிரிக்கெட் போட்டி வடிவமானது ரசிகர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. அதேநேரத்தில் இன்றைய போட்டிகள் மிகவும் கணிக்கக்கூடிய வகையில் உள்ளன. எனவே, ஒருநாள் கிரிக்கெட் போட்டியை 25, 25 ஓவர்களாக அதாவது, 4 கால் பகுதிகளாக டெஸ்ட் போட்டியைப் போன்று நடத்தலாம்.
ஒவ்வொரு 25 ஓவர்களுக்குப் பிறகும் அணிகள் பேட்டிங் மற்றும் பந்துவீச்சுக்கு இடையில் மாறி மாறி விளையாடலாம். இதனால் இரு அணியினருக்கும் சம அளவில் வாய்ப்புகள் கிடைக்கும்.
அதாவது, முதல் 25 ஓவர்கள் பேட்டிங் செய்யும் அணி அடுத்த 25 ஓவர்கள் பந்து வீச வேண்டும். அதைதொடர்ந்து, மீண்டும் 25 ஓவர்கள் பேட்டிங் செய்து விட்டு மீண்டும் எதிரணிக்கு பேட்டிங் வாய்ப்பை வழங்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.