

மும்பை: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பொறுப்புடன் விளையாடி அணியை வெற்றி பெற செய்தார் இந்திய வீரர் கே.எல்.ராகுல். அவரது இந்த மேட்ச் வின்னிங் இன்னிங்ஸை இந்திய அணியின் முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் பாராட்டியுள்ளார்.
இந்தப் போட்டிக்கு முன்னதாக கே.எல்.ராகுல் ரன் சேர்க்க முடியாமல் தடுமாறினார். அதன் காரணமாக டெஸ்ட் கிரிக்கெட் அணியில் ஆடும் லெவனில் தனது இடத்தை அவர் இழந்திருந்தார். இந்த சூழலில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 91 பந்துகளில் 75 ரன்கள் சேர்த்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் விளையாடி இருந்தார் ராகுல்.
“ஆட்டத்தில் அழுத்தம் அதிகம் நிறைந்திருந்த சூழலில் அற்புதமான இன்னிங்ஸ் ஆடி அசத்தினார் ராகுல். அவரது தரமான ஆட்டம் இது. அவருக்கு துணையாக களத்தில் பேட் செய்தார் ஜடேஜா. இந்திய அணியின் சிறப்பான வெற்றி இது” என வெங்கடேஷ் பிரசாத் ட்வீட் செய்துள்ளார்.
முன்னதாக, ராகுல் ரன் சேர்க்க தடுமாறியபோது வெளிப்படையாகவே அவரை வெங்கடேஷ் பிரசாத் விமர்சித்திருந்தார். மிகவும் காட்டமாக அந்த விமர்சனங்களை அவர் அப்போது முன்வைத்திருந்தார். அது சமூக வலைதளத்தில் அதிகம் கவனம் பெற்றது.