Last Updated : 10 Sep, 2017 03:49 PM

 

Published : 10 Sep 2017 03:49 PM
Last Updated : 10 Sep 2017 03:49 PM

அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் நுழைந்தார் ரபேல் நடால்: தென் ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சனுடன் பலப்பரீட்சை

அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதி சுற்றுக்கு ஸ்பெயினின் ரபேல் நடால் முன்னேறினார். இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சனுடன் அவர் பலப்பரீட்சை நடத்துகிறார்.

நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால், 24-ம் நிலை வீரரான அர்ஜென்டினாவின் ஜூயன் மார்ட்டின் டெல் போட்ரோவை எதிர்த்து விளையாடினார். இதில் முதல் செட்டை 4-6 என இழந்த நடால் அதன் பின்னர் அடுத்த 3 செட்களிலும் ஆக்ரோஷமாக விளையாடி 6-0, 6-3, 6-2 என கைப்பற்றினார். 2 மணி நேரம் 30 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 31 வயதான ரபேல் நடால் 4-6, 6-0, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 4-வது முறையாக அமெரிக்க ஓபன் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

2010 மற்றும் 2013-ம் ஆண்டு அமெரிக்க ஓபனில் பட்டம் வென்றுள்ள ரபேல் நடால் இம்முறை இறுதிப் போட்டியில் 28-ம் நிலை வீரரான தென் ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சனுடன் மோதுகிறார். கெவின் ஆண்டர்சன் தனது அரை இறுதியில் 12-ம் நிலை வீரரான ஸ்பெயினின் கார்ரெனோ பஸ்டாவை எதிர்த்து விளையாடினார். இதில் கெவின் ஆண்டர்சன் 4-6, 7-5, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம் 52 வருடங்ளுக்கு பிறகு அமெரிக்க ஓபன் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ள முதல் தென் ஆப்பிரிக்க வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் கெவின் ஆண்டர்சன்.

கடைசியாக 1965-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஓபன் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த கிளிப் டிரைஸ்டேல் இறுதிப் போட்டியில் கால் பதித்திருந்தார். ஸ்பெயினின் மனுவேல் சான்டாவுடன் மோதிய அவர், 6–2, 7–9, 7–5, 6–1 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து கோப்பை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டிருந்தார். கிராண்ட் ஸ்லாம் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு முதன் முறையாக தகுதி பெற்றுள்ள கெவின் ஆண்டர்சன் இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த ரபேல் நடாலை சந்திக்கிறார்.

22 கிராண்ட் ஸ்லாம் இறுதிப் போட்டிகளை சந்தித்துள்ள ரபேல் நடால் 15 பட்டங்களை வென்றுள்ளார். அதிலும் காயங்களுக்கு பிறகு இந்த ஆண்டில் புத்துணர்ச்சியுடன் விளையாடி வரும் அவர் 3-வது கிராண்ட் ஸ்லாம் இறுதிப் போட்டியை எதிர்கொள்கிறார். கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபனில் ரோஜர் பெடரரிடம் கோப்பையை இழந்த நடால், அதன் பின்னர் பிரெஞ்சு ஓபனில் 10-வது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்திருந்தார். இன்றைய ஆட்டத்தில் அவர் பட்டம் வெல்லும் பட்சத்தில் அது அவரது 16-வது கிராண்ட் ஸ்லாம் கோப்பையாக இருக்கும்.

சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இதுவரை ரபேல் நடாலும், கெவின் ஆண்டர்சனும் 4 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி உள்ளனர். இதில் நடால் 4 ஆட்டங்களிலும் வெற்றியை பதிவு செய்துள்ளார். அரை இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற பிறகு ரபேல் நடால் கூறும்போது, “காயம் அடைந்த கடினமான தருணங்களுக்கு பிறகு இந்த சீசன் எனக்கு அற்புதமாக அமைந்துள்ளது. இது எனக்கு மிகவும் உணர்ச்சிப்பூர்வமான ஆண்டு. நான் மீண்டும் இறுதிப் போட்டியில் இருக்கிறேன்.

மற்றொரு பட்டத்துக்காக போராடுவதற்கான வாய்ப்பை பெறுவது மிகவும் முக்கியமானது. பெரிய அளவில் சர்வீஸ்கள் மேற்கொள்ளும் கெவின் ஆண்டர்சன் மிகவும் அபாயகரமான வீரர். அதிலும் இதுபோன்ற ஆடுகளத்தில் அவர், சிறப்பாக செயல்படக்கூடியவர். 12 வயதில் இருந்தே ஆண்டர்சனை நான் அறிந்துள்ளேன். அவர் பல்வேறு காயங்கள் அடைந்துள்ளார். எனினும் அதில் இருந்து மீண்டு வந்து விளையாடுவது, சிறுவர்களுக்கு சிறந்த உதாரணம்” என்றார்.

31 வயதான கெவின் ஆண்டர்சன் இறுதிப் போட்டியில் ரபேல் நடாலை வீழ்த்தி பட்டம் வென்றால் அமெரிக்க ஓபனை வெல்லும் முதல் தென் ஆப்பிரிக்க வீரர் என்ற சாதனையை படைப்பார். மேலும் 1981-ம் ஆண்டுக்கு பிறகு கிராண்ட் ஸ்லாம் பட்டம் கைப்பற்றும் முதல் தென் ஆப்பிரிக்க வீரர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரராக மாறுவார். அந்நாட்டைச் சேர்ந்த ஜோகன் கிரிக் கடைசியாக 1981-ல் ஆஸ்திரேலிய ஓபனில் பட்டம் வென்றிருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x