

1984-ம் ஆண்டு கிளைவ் லாய்ட் கேப்டன்சியில் வலுவான மே.இ.தீவுகள் இங்கிலாந்தில் பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றது.
இதில் லார்ட்ஸ் மைதானத்தில் ஜூன் 28 முதல் ஜூலை 3-ம் தேதி வரை நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஒரு நாளுக்கும் குறைவான கடைசி நாள் இலக்கான 342 ரன்கள் இலக்கை 66 ஓவர்களில் விளாசி மே.இ.தீவுகள் அணி 344/1 என்று 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த அரிய அதிரடி வெற்றியைச் சாதித்துக் கொடுத்ததின் பின்னணியில் தொடக்க வீரர் கார்டன் கிரீனிட்ஜின் அசாத்திய இரட்டைச் சதம் உள்ளது.
இங்கிலாந்து அணிக்கு டேவிட் கோவர் கேப்டன், கிரேம் பவுலர், கிறிஸ் பிராட் (ஸ்டூவர்ட் பிராடின் தந்தை), ஆலன் லாம்ப், இயன் போத்தம், பால் டவுண்ட்டன் (வி.கீ), டெரிக் பிரிங்கிள், நீல் ஃபாஸ்டர், பாப் வில்லிஸ் ஆகியோர் அடங்கிய சிறந்த அணி இருந்தது.
மே.இ.தீவுகளில் கார்டன் கிரீனிட்ஜ், டெஸ்மண்ட் ஹைன்ஸ், விவ் ரிச்சட்ஸ், லாரி கோம்ஸ், கிளைவ் லாய்ட், ஜெஃப் டியூஜான், மால்கம் மார்ஷல், எல்டின் பாப்டிஸ்ட், ஹார்ப்பர், கார்னர், மில்டன் ஸ்மால் ஆகியோர் விளையாடினர்.
இங்கிலாந்து தன் முதல் இன்னிங்ஸில் கிரேம் ஃபவுலரின் அபார சதத்துடன் (106) மால்கம் மார்ஷலின் வேகத்துக்கு சுருண்டு 286 ரன்களையே எடுத்தது, மார்ஷல் 6/85. மே.இ.தீவுகள் அணி இயன் போத்தமின் அசாத்தியமான ஸ்விங் பவுலிங்கிறு 245 ரன்களில் சுருண்டது. விவ் ரிச்சர்ட்ஸ் மட்டுமே 94 பந்துகளில் 72 ரன்களை விளாசினார். எல்டின் பாப்டிஸ்ட் 44 ரன்களை எடுத்தார், இயன் போத்தம் 103 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இங்கிலாந்து தன் 2வது இன்னிங்சில் ஆலன் லாம்ப் (110) சதத்துடன் 300/9 என்று டிக்ளேர் செய்தது. அதாவது 4ம் நாள் ஆட்டத்தின் முடிவில் 287 என்று இருந்து மறுநாள் 5ம் நாள் 300/9 என்று டிக்ளேர் செய்ய இலக்கு 342 ரன்கள் ஒரு நாளுக்குள் அடிக்க வேண்டும் மே.இ.தீவுகள். அப்போதெல்லாம் இவ்வளவு ஓவர்கள் வீசியே ஆக வேண்டும் என்ற கட்டாயமெல்லாம் கிடையாது, கடைசி நாள் ஆட்டத்தில் கட்டாய 20 ஒவர்கள் ஆட்டம் முடியும் முன் அனுமதிக்கப்படும் அவ்வளவே.
342 ரன்கள் இலக்கை எதிர்த்து இறங்கிய மே.இ.தீவுகளில் டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ் 17 ரன்களில் ரன் அவுட் ஆக, கார்டன் கிரீனிட்ஜ், லாரி கோம்ஸ் இனைந்தனர். 114 பந்துகளில் கார்டன் கிரீனிட்ஜ் சதம் கண்டார். அற்புதமான இன்னிங்ஸ். பார்ப்பதற்கு லேசாக சேவாக் ஜாடை இன்னிங்ஸ் ஆகும் இது. ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் ஷார்ட் பிட்ச் பந்துகளை ஸ்கொயர் கட் அடித்து பவுண்டரிக்குப் பறக்க விட்டதாகட்டும், கவர் ட்ரைவ், ஆஃப் ட்ரைவ் ஆகியவற்றோடு லெக் திசையில் ஹை பிளிக் ரக ஷாட்களை நிறைய ஆடினார், அனைத்தும் வேகப்பந்து வீச்சாளர்களை என்பது குறிப்பிடத்தக்கது
114 பந்துகளில் சதம் கண்ட கிரீனிட்ஜ் 233 பந்துகளில் இரட்டைச் சதம் கண்டார், அதுவும் எப்படி தெரியுமா, குத்தி எழுப்பப்பட்ட ஷார்ட் பிட்ச் பந்து ஸ்கொயர் லெக் பவுண்டரியில் சிக்ஸ். இன்னொரு முனையில் இடது கை ஸ்டைலிஷ் பேட்டர் லாரி கோம்ஸ் இவர் நேர் ட்ரைவ், பிளிக், கவர் ட்ரைவ் ஆகியவற்றில் சிறந்து விளங்குபவர். கார்டன் கிரீனிட்ச் 242 பந்துகளில் 29 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 214 ரன்களை விளாசி நாட் அவுட், லாரி கோம்ஸ் 140 பந்துகளில் 92 ரன்கள், இதில் 13 பவுண்டரி. 287 ரன்களை இருவரும் சுமார் 50 ஓவர்களில் சேர்த்துள்ளனர் என்றால் சாத்துமுறை எப்படி நடந்திருக்கும் என்பதை ஊகித்துக் கொள்ளலாம். 344/1 என்று வெற்றி பெற்றது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்று முன்னிலை பெற்றது வெஸ்ட் இண்டீஸ்.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 4-வது இன்னிங்சில் அதிரடி இரட்டைச் சதம் விளாசி அது வெற்றியில் முடிவடைந்த ஆல்டைம் கிரேட் இன்னிங்ஸ் இது என்பது குறிப்பிடத்தக்கது. கிரீனிட்ஜ் 108 டெஸ்ட் போட்டிகளில் 7558 ரன்களை 19 சதங்கள் 34 அரைசதங்களுடன் 44.72 என்ற சராசரியில் எடுத்துள்ளார். 128 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 5134 ரன்களை 11 சதங்கள் 31 அரைசதங்களுடன் எடுத்துள்ளார். சராசரி 45. 1991 உடன் இவரது கரியர் முடிவுக்கு வருகின்றது. இவர் போன்ற ஒரு வீரரை இனி காண்பது அரிதே.