

ஹெச்.எஸ்.பிரனாய் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்: ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரனாய் 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரனாய், சீன தைபேவின் ஸூ வெய் வாங்கை எதிர்த்து விளையாடினார். 49 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஹெச்.எஸ்.பிரனாய் 21-19 22-20 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். 2-வது சுற்றில் தாய்லாந்தின் அந்தோணி சினிசுகா ஜின்டிங்குடன் மோதுகிறார் ஹெச்.எஸ்.பிரனாய்.
மணிகா பத்ரா, சத்யன் ஜோடி தோல்வி: சிங்கப்பூர் ஸ்மாஷ் டேபிள் டென்னிஸ் தொடரில் இந்தியாவின் மணிகா பத்ரா மகளிர் இரட்டையர் பிரிவு மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவு ஆட்டங்களில் தோல்வி அடைந்தார்.
சிங்கப்பூரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் கலப்பு இரட்டையர் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் மணிகா பத்ரா, சத்யன் ஞானசேகரன் ஜோடி, உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஜப்பானின் ஹினா ஹயாதா, டொமோகசு ஹரிமோடோ ஜோடியை எதிர்த்து விளையாடியது. இதில் மணிகா பத்ரா, சத்யன் ஜோடி 9-11 9-11 11-8 11-5 7-11 என்ற செட் கணக்கில் போராடி தோல்வி அடைந்தது. இந்த ஆட்டம் 52 நிமிடங்கள் நடைபெற்றது.
மகளிர் இரட்டையர் பிரிவில் மணிகா பத்ரா, சகநாட்டைச் சேர்ந்த அர்ச்சனாவுடன் இணைந்து களமிறங்கினார். இந்த ஜோடி 2-வது சுற்றில் 2-11 6-11 15-13 12-10 6-11 என்ற செட் கணக்கில் சீனாவின் மெங் சென், யிடி வாங் ஜோடியிடம் தோல்வி அடைந்தது.