

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான 3-வது ஒருநாள் போட்டியில் ஆரோன் பின்ச் சதத்துடன் ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட் இழப்புக்கு 293 ரன்கள் குவித்துள்ளது.
5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், இந்தூரில் இன்று (செப்.24) 3-வது ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது ஆஸ்திரேலியா அணி. காயம் காரணமாக முதல் இரண்டு போட்டிகளில் இடம்பெறாத ஆரோன் பின்ச் இன்றைய போட்டியில் களமிறங்கினார். வார்னர் உடன் தொடக்க வீரராக களம் இறங்கிய ஆரோன் பின்ச் முதலில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பின்னர் நேரம் செல்லச்செல்ல அவரது ஆட்டத்தில் அபாரம் வெளிப்பட்டது.
61 பந்தில் அரைசதம் அடித்தார் ஆரோன் பின்ச். 34-வது ஓவரின் 2-வது பந்தை பவுண்டரிக்கு விளாசி சதம் அடித்தார். 110 பந்தில் 11 பவுண்டரி, 3 சிக்ஸருடன் சதத்தை கடந்தார். ஆரோன் பின்ச் 124 ரன்கள் அடித்த அவுட் ஆனார்.
ஆஸ்திரேலியா தரப்பில், வார்னர் 42 ரன்கள் அடித்தார். ஸ்டீவன் ஸ்மித் 63 ரன்களும் மார்கஸ் ஸ்டாய்னிஸ் 27 ரன்களும் அடித்தனர். மேக்ஸ்வெல், ட்ராவிஸ், ஆஷ்டன், ஹேண்ட்ஸ்கோம்ப் ஆகியோர் சொற்ப ரன்களே அடித்தனர். இறுதியாக 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு ஆஸ்திரேலியா 293 ரன்களை குவித்தது.
இலக்கு 294:
தொடரை வெல்லும் வேட்கையுடன் உள்ள இந்திய அணிக்கு 294 ரன்களை ஆஸ்திரேலியா இலக்காக நிர்ணயித்துள்ளது. ஆஸ்திரேலிய அணி தோல்விகளில் இருந்து மீள வேண்டுமென்றால் டேவிட் வார்னர், மேக்ஸ்வெல் ஆகியோர் பெரிய அளவில் ரன்கள் குவிக்க வேண்டும். காயம் காரணமாக கடந்த இரு ஆட்டத்திலும் களமிறங்காத ஆரோன் பின்ச் களமிறங்க வேண்டும் என கணிக்கப்பட்ட நிலையில் ஆஸ்திரேலியா இன்றைய போட்டியில் வலுவான இலக்கை நிர்ணயித்து தோல்வியில் இருந்து மீண்டுவர முயற்சித்துள்ளது.
இந்த இலக்கை இந்திய அணி எட்டி தொடரைக் கைப்பற்றுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.