Published : 02 Sep 2017 10:06 AM
Last Updated : 02 Sep 2017 10:06 AM

4-வது ஒருநாள் போட்டியில் மகத்தான வெற்றி: இளம் வீரர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் - இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி உறுதி

வரும் ஆட்டங்களில் இளம் வீரர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்பு நகரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 375 ரன்களைக் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 131, ரோஹித் சர்மா 104 ரன்களைக் குவித்தனர்.

வெற்றிபெற 376 ரன்களை எடுக்கவேண்டும் என்ற நிலையில் விளையாட வந்த இலங்கை அணி, அதற்கான எந்த முயற்சியையும் எடுக்காமல் ஆரம்பம் முதலே இந்திய அணியிடம் சரண் அடைந்தது. அந்த அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களான நிரோஷன் திக்வெலா 14, மெண்டிஸ் 1, முனவீரா 11, திரிமானே 18 ரன்களில் ஆட்டமிழக்க, 4 விக்கெட் இழப்புக்கு 68 ரன்கள் என்று அந்த அணி திணறியது.

இந்த மோசமான சரிவில் இருந்து இலங்கை அணியை மீட்க ஏஞ்சலோ மேத்யூஸ் போராடினார். 80 பந்துகளை சந்தித்த அவர், 10 பவுண்டரிகளுடன் 70 ரன்களைக் குவித்தார். ஆனால் அவருக்கு துணையாக யாரும் விளையாடாததால் இலங்கை அணியை கரைசேர்க்க முடியவில்லை. இறுதியில் இலங்கை அணி 42.4 ஓவர்களில் 207 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

168 ரன்கள் வித்தியாசத்தில் இப்போட்டியில் அபாரமாக வெற்றி பெற்ற இந்திய அணி, ஒருநாள் போட்டித் தொடரில் 4-0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது. இப்போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர். ஆட்ட நாயகனாக விராட் கோலி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இலங்கை அணிக்கு எதிரான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வென்ற பிறகு, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியதாவது:

இலங்கை அணிக்கு எதிரான இப்போட்டி எங்களுக்கு சிறப்பாக அமைந்தது. இந்த ஆட்டத்தில் எந்த ஒரு கட்டத்திலும் மெத்தனமாக இருந்துவிடக் கூடாது என்று முன்பே பேசி வைத்திருந்தோம். அதன்படி வீரர்கள் அனைவரும் நன்றாக விளையாடி சிறந்த வெற்றியைப் பெற்றனர். இதற்கு முன்பு நடந்த 3 போட்டிகளிலும் நாங்கள் இரண்டாவதாகத்தான் பேட்டிங் செய்திருந்தோம். அதனால் 4-வது போட்டியில் முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தோம்.

கொழும்பு ஆடுகளம் பேட்டிங்குக்கு மிகவும் சாதகமாக இருந்தது. டாஸில் வென்றதும் எங்களுக்கு அனுகூலமாக இருந்தது. நாங்கள் அதிக ரன்களைக் குவித்ததால் இலங்கை அணி எங்கள் ஸ்கோரை நெருங்க முடியாமல் சிரமப்பட்டது.

4-வது ஒருநாள் போட்டியில் 3 இளம் வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது. அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்குவோம். இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் சிறப்பாக உள்ளதால் பரீட்சார்த்தமான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்வோம்.

இவ்வாறு விராட் கோலி கூறினார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன் லஸித் மலிங்கா கூறியதாவது:

இப்போட்டியில் 300-வது விக்கெட்டை வீழ்த்தியது சிறப்பானதுதான். ஆனால் நான் இதை வெறும் ஒரு எண்ணாகவே கருதுகிறேன். கடந்த சில நாட்களாகவே இலங்கை கிரிக்கெட் அணிக்காக நான் எதையும் பெரிதாகச் செய்யவில்லை. இன்றைய போட்டியிலும் நாங்கள் தோல்வியைச் சந்தித்தது ஏமாற்றமாக உள்ளது.

இந்த தொடரில் நாங்கள் இதுவரை ஒரு முறைகூட 250 ரன்களைக் கடக்கவில்லை. அணியில் உள்ள இளம் வீரர்கள் தங்கள் திறமைக்கு ஏற்ப ரன்களைக் குவிக்க முடியவில்லை என்று கருதுகிறேன். எதிர்காலத்தில் அவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இலங்கை அணிக்கு வெற்றிகளை பெற்றுத் தருவார்கள் என்று நம்புகிறேன்.இவ்வாறு மலிங்கா கூறினார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x