

மும்பை: நடப்பு மகளிர் ப்ரீமியர் லீக் சீசனின் 10-வது லீக் போட்டியில் உத்தரபிரதேச வாரியர்ஸ் அணியை வீழ்த்தி 8 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வென்றுள்ளது.
டாஸ் வென்ற உத்தரபிரதேச வாரியர்ஸ் முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி, கேப்டன் ஹீலே மற்றும் தஹ்லியா மெக்ராத் ஆகியோரின் அரை சதங்கள் காரணமாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் குவித்தது அந்த அணி. மும்பை வீராங்கனை சைகா இஷாக் அதிகபட்சமாக 3 விக்கெட் வீழ்த்தினார்.
160 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஹேலி மேத்யூஸ் 12 ரன்களில் ஏமாற்றினாலும் யாஸ்திகா பாட்டியா வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்தார். அவருக்கு பக்கபலமாக நாட் ஸ்கிவர்-பிரண்ட் ரன்களை குவித்தார். யாஸ்திகா 42 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப ஸ்கிவர்-பிரண்ட் உடன் கூட்டணி அமைத்தார் மும்பை கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர்.
இவர்கள் இருவரும் உத்தரபிரதேச பவுலர்கள் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். ஹர்மன்ப்ரீத் அரைசதம் கடந்தார். அதேவேளையில் ஸ்கிவர்-பிரண்ட் 45 ரன்கள் குவித்தார். இந்த இருவரின் அதிரடியால் மும்பை அணி 17.3 ஓவர்களிலேயே 2 விக்கெட்டை மட்டும் இழந்து வெற்றி இலக்கை எட்டியது. ஸ்கிவர்-பிரண்ட் கடைசி பந்தை சிக்ஸ் அடித்து அணிக்கு வெற்றி தேடித் தந்தார்.
நடப்பு மகளிர் ப்ரீமியர் லீக் தொடரில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி பலம் வாய்ந்த அணியாக உருவெடுத்துள்ளது. இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளிலும் வென்று புள்ளி பட்டியலில் முதலில் இடம்பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.