Published : 12 Mar 2023 12:00 PM
Last Updated : 12 Mar 2023 12:00 PM

IND vs AUS 4-வது டெஸ்ட் | கோலி 88 ரன்கள்: ஸ்ரேயஸ் ஐயருக்கு காயம்?

விராட் கோலி

அகமதாபாத்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பேட்ஸ்மேன் ஸ்ரேயஸ் ஐயர் பேட் செய்ய வரவில்லை. அவருக்கு பதிலாக பேட்டிங் ஆர்டரில் ஆறாவது பேட்ஸ்மேனாக விக்கெட் கீப்பர் கே.எஸ்.பரத் களம் கண்டு விளையாடி வருகிறார்.

அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 480 ரன்கள் குவித்தது. தொடர்ந்து இந்திய அணி முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

நான்காம் நாள் ஆட்டத்தை 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 289 ரன்கள் உடன் துவங்கியது இந்தியா. கோலி மற்றும் ஜடேஜா விளையாடினர். இதில் ஜடேஜா, 84 பந்துகளை எதிர்கொண்டு 28 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அதைத் தொடர்ந்து கே.எஸ்.பரத் பேட் செய்ய வந்தார். உடனடியாக ஸ்ரேயஸ் ஐயர் எங்கே? என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பினர்.

ஸ்ரேயஸ் ஐயருக்கு முதுகு பகுதியில் வலி ஏற்பட்ட காரணத்தால் அவர் பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளதாகவும், அவரை பிசிசிஐ மருத்துவக் குழுவினர் பரிசோதித்து வருவதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

முன்னதாக, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை முதுகு வலி காரணமாக ஸ்ரேயஸ் மிஸ் செய்திருந்தார். அதற்கு முன்னர் நியூஸிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை அவர் முதுகு வலி காரணமாக மிஸ் செய்திருந்தார். அவர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடற்தகுதி உறுதி செய்த பின்னரே ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட களம் கண்டார். இந்நிலையில், மீண்டும் முதுகு வலி பாதிப்புக்கு அவர் ஆளாகி உள்ளார். இது இந்திய அணி வீரர்களின் உடற்தகுதி திறன் குறித்த கேள்வியை எழுப்புகிறது.

நான்காம் நாள் உணவு நேர இடைவேளையின் போது இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 362 ரன்கள் குவித்துள்ளது. கோலி 88 ரன்கள் மற்றும் கே.எஸ்.பரத் 25 ரன்கள் எடுத்து விளையாடி வருகின்றனர். இருவரும் 53 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x