

கிறைஸ்ட்சர்ச்: நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இலங்கை அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 305 ரன்கள் குவித்தது.
கிறைஸ்ட்சர்ச் நகரில் நேற்று தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து பீல்டிங்கை தேர்வு செய்தது. இலங்கை அணி பேட்டிங்கை தொடங்கிய நிலையில் தொடக்க வீரரான ஓஷாடா பெர்னாண்டோ 13 ரன்களில் டிம் சவுதி பந்தில் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் களமிறங்கிய குஷால் மெண்டிஸ், கேப்டன் திமுத் கருணரத்னேவுடன் இணைந்து விரைவாக ரன்கள் சேர்த்தார். 40 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன், அரை சதம் அடித்து அசத்தினார் குஷால் மெண்டிஸ். இது அவரது 16-வது அரை சதமாக அமைந்தது.
சிறப்பாக விளையாடி வந்த குஷால் மெண்டிஸ் 83 பந்துகளில், 16 பவுண்டரிகளுடன் 87 ரன்கள் எடுத்த நிலையில் டிம் சவுதி பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். 2-வது விக்கெட்டுக்கு கருண ரத்னேவுடன் இணைந்து 137 ரன்கள் சேர்த்தார் குஷால் மெண்டிஸ். தனது 31-வது அரை சதத்தை கடந்த கருண ரத்னே 87 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் எடுத்த நிலையில் மேட் ஹென்றி பந்தில் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் களமிறங்கிய தினேஷ் சந்திமால் 39, ஏஞ்சலோ மேத்யூஸ் 47, நிரோஷன் திக்வெலா 7 ரன்கள் சேர்த்து வெளியேறினர்.
இலங்கை அணி 75 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 305 ரன்கள் எடுத்திருந்த போது போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் முதல்நாள் ஆட்டம் முடித்துக்கொள்ளப்பட்டது. தனஞ்ஜெயா டி சில்வா 39, கசன் ரஜிதா 16 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். நியூஸிலாந்து தரப்பில் டிம் சவுதி 3, மேட் ஹென்றி 2, மைக்கேல் பிரேஸ்வெல் ஒரு விக்கெட் கைப்பற்றினர். கைவசம் 4 விக்கெட்கள் இருக்க இன்றைய 2-வது நாள்ஆட்டத்தை தொடர்ந்து விளையாடுகிறது இலங்கை அணி.