

அகமதாபாத்: இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி துவக்கத்தின்போது இந்திய அணி வீரர்களுடன் தேசிய கீதம் பாடி இருந்தார் பிரதமர் நரேந்திர மோடி. இந்த வீடியோ சமூக வலைதளமான ட்விட்டர் தளத்தில் மட்டும் சுமார் 1 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்தத் தொடரின் கடைசி போட்டி இன்று அகமதாபாத் நகரில் அமைந்துள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் துவங்கியது.
இந்தப் போட்டியை காண பிரதமர் மோடி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மைதானம் வந்தனர். அப்போது போட்டி தொடங்குவதற்கு முன்பாக இந்திய அணி வீரர்களுடன் இணைந்து பிரதமர் மோடி தேசிய கீதம் பாடி இருந்தார். அப்போது மைதானத்தில் குழுமியிருந்த ஒவ்வொரு இந்தியரும் தேசிய கீதம் பாடினர். இந்த வீடியோவை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. அதனை மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்தப் போட்டியின் முதல் நாள் தேநீர் நேர முடிவின் போது ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்திருந்தது. களத்தில் உஸ்மான் கவாஜா மற்றும் கேப்டன் ஸ்மித் விளையாடிக் கொண்டிருந்தனர்.