

லாஸ் ஏஞ்சல்ஸ்: இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து உலகின் முதல்நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் விலகி உள்ளதாக போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள இந்தியன் வெல்ஸ் நகரில் ஆயிரம் புள்ளிகள் கொண்ட இந்தியன் வெல்ஸ் ஓபன் ஏடிபி தொடர் நாளை (8-ம்தேதி) தொடங்கி வரும் 19-ம்தேதி வரை நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்தத் தொடரில் இருந்து முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் விலகி உள்ளதாக போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். ஜோகோவிச்சுக்கு பதிலாக ஜார்ஜியாவின் நிகோலோஸ் பாசிலாஷ்விலி சேர்க்கப்பட்டுள்ளார்.
கரோனாவுக்கு எதிரான தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததால் ஜோகோவிச்சால் அமெரிக்காவுக்குள் நுழைய முடியவில்லை. இந்தியன் வெல்ஸ் தொடரில் கலந்து கொள்வதற்காக தனக்கு சிறப்பு அனுமதி வழங்கக்கோரி அமெரிக்க அதிகாரிகளிடம் ஜோகோவிச் மனு செய்திருந்தார். இந்த மனு நிராகரிக்கப்பட்டதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்தே ஜோகோவிச், இந்தியன் வெல்ஸ்தொடரில் இருந்து விலகி உள்ளதாக டென்னிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத சர்வதேசப் பயணிகளை நாட்டிற்குள் நுழைய அமெரிக்கா இன்னும் அனுமதி வழங்கவில்லை. இந்த கொள்கையில் வரும் ஏப்ரல்மாத நடுப்பகுதி வரை எந்தவித மாற்றமும் இருக்காது என அந்நாட்டின் போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம் சமீபத்தில் சுட்டிக்காட்டி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியன் வெல்ஸ் தொடரை தொடர்ந்து நடைபெற உள்ள மியாமி ஓபனிலும் ஜோகோவிச் கலந்து கொள்வது சந்தேகம் என்றே தெரிகிறது. கரோனா தடுப்பூசி விவகாரத்தால் கடந்த 2022-ம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்க சென்றிருந்த ஜோகோவிச் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். அதே ஆண்டில் விம்பிள்டனில் பட்டம் வென்ற அவர், பயண கட்டுப்பாடுகள் காரணமாக அமெரிக்க ஓபன் தொடரை தவறவிட்டார்.
இந்த ஆண்டில் ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்க ஜோகோவிச்சுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற தொடரில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். இது அவரது 22-வது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகவும் அமைந்திருந்தது. கடந்த வாரம் துபாய் டென்னிஸ் தொடரில் விளையாடிய ஜோகோவிச் அரை இறுதி சுற்றுடன் வெளியேறி இருந்தார்.