

சென்னை: சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை,கேலோ இந்தியா, இந்திய விளையாட்டு ஆணையம் ஆகியவை இணைந்து 10 நகரங்களில் 10 விளையாட்டுகளை நடத்துகிறது.
இந்த 10 விளையாட்டுகளில் ஒன்றான நீச்சல் போட்டி 10 நகரங்களில் நடத்தப்படுகிறது. அதில் ஒன்றாக தமிழ்நாடு மாநில நீச்சல் சங்கத்தின் சார்பில் சென்னை முகப்பேரில் உள்ள எஸ்.டி.ஏ.டி. டால்பின் நீச்சல் அகாடமி தேர்வு செய்யப்பட்டுள்ளது. வரும் 12-ம் தேதி காலை 8 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
11 வயது, 14 வயது, 17 வயது, 25 வயது, 35 வயது மற்றும் 45 வயதுக்குட்பட்டோர் பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. ஓபன் பிரிவு போட்டியான இதில் பங்கேற்க விரும்பும் பெண்கள் admin@tnsaa.in என்ற மின்னஞ்சல் முகவரியில் பதிவு செய்துகொள்ளலாம். இத்தகவலை தமிழ்நாடு மாநில நீச்சல் சங்கம் தெரிவித்துள்ளது.