Published : 06 Mar 2023 09:08 AM
Last Updated : 06 Mar 2023 09:08 AM

தொடங்கிய இடத்திலேயே டென்னிஸ் பயணத்தை முடித்த சானியா: ரசிகர்களைப் பார்த்து ஆனந்தக் கண்ணீர்

சானியா மிர்சா

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் காட்சிப் போட்டியில் விளையாடியதன் மூலம் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, தனது டென்னிஸ் பயணத்தை தொடங்கிய இடத்திலேயே முடித்துள்ளார். அப்போது தனது ரசிகர்களைப் பார்த்து அவர் ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.

இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையாகத் திகழ்ந்தவர் சானியா மிர்சா. ஒற்றையர், இரட்டையர் டென்னிஸ் போட்டிகளில் உலக அளவில் சாதித்தவர் சானியா. 6 கிராண்ட்ஸ்லாம் இரட்டையர் பட்டங்களை வென்று இந்தியாவின் டென்னிஸ் நட்சத்திரமாகத் திகழ்ந்தவர்.

இந்நிலையில் கடந்த வாரம் துபாயில் நடைபெற்ற டூட்டி ப்ரீ டென்னிஸ் போட்டியுடன் சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.

இதனிடையே, தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்திலுள்ள லால் பகதூர் டென்னிஸ் ஸ்டேடியத்தில் டென்னிஸ் காட்சிப் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த காட்சிப் போட்டியில் சானியா மிர்சா, ரோஹன் போபண்ணா, கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் ஆகியோர் பங்கேற்றனர்.

ஹைதராபாத் மைதானத்தில்தான் தனது டென்னிஸ் பயணத்தை சானியாமிர்சா தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று நடைபெற்ற காட்சிப்போட்டியில் பங்கேற்றதன் மூலம் தொடங்கிய இடத்திலேயே தனது டென்னிஸ் வாழ்க்கையை முடித்துள்ளதாக சானியா உருக்கமாகத் தெரிவித்தார்.

இந்த காட்சிப் போட்டியை மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு,இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள்கேப்டன் முகமது அசாருதீன் உள்ளிட்டோர் நேரில் கண்டு ரசித்தனர்.

முன்னதாக மைதானத்துக்கு வந்தசானியா மிர்சாவை அவரது ரசிகர்கள் உற்சாகக் குரல் எழுப்பி வரவேற்றனர்.

நிகழ்ச்சியில் சானியா மிர்சா பேசியதாவது: 20 ஆண்டுகளுக்கு முன்பு இங்குதான் டென்னிஸ் பயணத்தை தொடங்கினேன். தொடங்கிய இடத்திலேயே எனது டென்னிஸ் பயணம் முடிந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இதை நினைக்கும்போது ஆனந்தக் கண்ணீர் வருகிறது.

20 ஆண்டுகளாக பல சர்வதேசப் போட்டிகளில் விளையாடி உள்ளேன். ஆனால் ஹைதராபாத் லால் பகதூர் ஸ்டேடியம் எனக்கு சிறப்பானது. இங்குபல சாம்பியன் பட்டங்களைக் கைப்பற்றியுள்ளேன். உங்கள் (ரசிகர்கள்) முன்னால் எனது காட்சிப் போட்டியை விளையாடுவதில் ஆவலாக உள்ளேன். என்னால் பேசவே முடியவில்லை. ஆனந்தக் கண்ணீர் பெருகுகிறது. இதைவிட எனக்கு சிறந்த வழிஅனுப்புதல் போட்டி இருக்கவே இருக்காது.

டென்னிஸிலிருந்து ஓய்வு பெற்றாலும் இந்தியாவில் விளையாட்டுத்துறைக்காகவும், டென்னிஸ் விளையாட்டின் மேம்பாட்டுக்காகவும் தொடர்ந்து பாடுபடுவேன். இவ்வாறு அவர் பேசினார்.

சானியா மிர்சா காட்சிப் போட்டியில் விளையாடியபோது கேலரியில் அமர்ந்திருந்த ரசிகர்கள் அவருக்கு உற்சாகமாக குரல் எழுப்பினர். அவர் போட்டி முடிந்து செல்லும்போது ரசிகர்கள் உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர். அவருக்காக கேலரியில் அமர்ந்தபடி வாழ்த்துப் பதாகைகளையும் ரசிகர்கள் வைத்திருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x