

மும்பை: நடப்பு மகளிர் ப்ரீமியர் லீக் தொடரில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது யூபி வாரியர்ஸ் அணி. அந்த அணிக்காக 8-வது விக்கெட்டிற்கு கிரேஸ் ஹாரிஸ் மற்றும் சோஃபி எக்லெஸ்டோன் இணைந்து 70 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அது அந்த அணிக்கு வெற்றி கூட்டணியாக அமைந்தது.
5 அணிகள் பங்கேற்று விளையாடி வரும் முதலாவது மகளிர் ப்ரீமியர் லீக் சீசன் சனிக்கிழமை அன்று தொடங்கியது. இந்த தொடரின் மூன்றாவது போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் யூபி வாரியர்ஸ் அணிகள் ஞாயிறு அன்று விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்காக அதிகபட்சமாக ஹர்லீன் தியோல், 32 பந்துகளில் 46 ரன்கள் எடுத்திருந்தார். மேகனா 24 ரன்கள், ஆஷ்லே கார்ட்னர் 25 ரன்கள் மற்றும் ஹேமலதா 21 ரன்கள் எடுத்திருந்தனர். 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை வாரியர்ஸ் அணி விரட்டியது.
கிரண் நவ்கிரே, 43 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து அவுட்டானார். 15.4 ஓவர்கள் முடிவில் வாரியர்ஸ் அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 105 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அப்போது டைம் அவுட் அறிவிக்கப்பட்டது.
அங்கிருந்து ஆட்டத்தை அப்படியே மாற்றினார் அந்த அணியின் வீராங்கனை கிரேஸ் ஹாரிஸ். சோஃபி எக்லெஸ்டோனும் அவருக்கு உதவியாக ரன் குவிப்பில் வேகத்தை கூட்டினார். ஆட்டத்தின் முடிவில் 26 பந்துகளில் 59 ரன்களை எடுத்திருந்தார் கிரேஸ் ஹாரிஸ். 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் இதில் அடங்கும். 12 பந்துகளில் 22 ரன்கள் எடுத்திருந்தார் சோஃபி எக்லெஸ்டோன். தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் அபாரமாக ஆட்டத்தை பினிஷ் செய்தார் கிரேஸ்.
19.5 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 175 எடுத்து வெற்றி பெற்றது வாரியர்ஸ் அணி. நடப்பு சீசனில் குஜராத் அணி இதுவரை 2 போட்டிகளில் விளையாடி இரண்டிலும் தோல்வியை தழுவியுள்ளது. இந்தப் போட்டியில் பிளேயர் ஆப் தி மேட்ச் விருதையும் கிரேஸ் ஹாரிஸ் வென்றிருந்தார்.
<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">