விளையாட்டுத் துளிகள் - இண்டியன்வெல்ஸ் டென்னிஸ் தொடரில் இருந்து நடால் விலகல்

விளையாட்டுத் துளிகள் - இண்டியன்வெல்ஸ் டென்னிஸ் தொடரில் இருந்து நடால் விலகல்
Updated on
1 min read

நடால் விலகல்: இண்டியன்வெல்ஸ், மியாமி ஏடிபி டென்னிஸ் போட்டியிலிருந்து விலகுவதாக பிரபல டென்னிஸ் வீரர் ரபேல் நடால் (ஸ்பெயின்) அறிவித்துள்ளார். 22 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் பட்டம் வென்ற சாதனை படைத்த நடால், சமீப காலமாக காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறார். அவருடைய இடுப்பு பகுதியில் தசைநார் முறிவு ஏற்பட்டுள்ளதால், அதற்காக சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் இண்டியன்வெல்ஸ் மற்றும் மியாமி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ரபேல் நடால் விலகுவதாக நேற்று அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறும்போது, ‘‘இண்டியன்வெல்ஸ் அல்லது மியாமி டென்னிஸில் என்னால் விளையாட முடியாமல் போனது வருத்தம் அளிக்கிறது. அங்குள்ள எனது அமெரிக்க ரசிகர்களை தவற விடுகிறேன்’’ என்றார்.

மும்பை அணிக்கு ஹர்மன்பிரீத் கேப்டன்: மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் (டபிள்யூபிஎல்) பங்கேற்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஹர்மன்பிரீத் கவுர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மார்ச் 4-ம் தேதி நடைபெறும் டபிள்யூபிஎல் போட்டியின் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மும்பை டிஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் மோதவுள்ளன.

டெஸ்ட் தரவரிசை அஸ்வின் முதலிடம்: ஐசிசி வெளியிட்டுள்ள டெஸ்ட்கிரிக்கெட் பவுலர்கள் தரவரிசையில் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 864 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளார். பவுலர்கள் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சனை (859 புள்ளிகள்) பின்னுக்குத் தள்ளி முதலிடத்துக்கு வந்துள்ளார் அஸ்வின்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in