

இந்தூர்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 109 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி உள்ளது. மறுபக்கம் ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட முடிவின் போது முதல் இன்னிங்ஸில் 47 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில், இந்திய ஆடுகளத்தின் தன்மையை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹேடன் விமர்சித்துள்ளார்.
நான்கு போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் இரண்டு போட்டிகளை இந்திய அணி வென்றது. அதன் மூலம் பார்டர்-கவாஸ்கர் கோப்பையை தக்க வைத்துள்ளது. இந்த நிலையில் மூன்றாவது போட்டியில் இப்போதைக்கு ஆஸ்திரேலிய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
“கடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றிகரமாக செயல்பட்ட இந்திய அணியின் முகாமில் தற்போது அமைதி நிலவுகிறது. ஆனால், நீங்கள் ஆடுகளத்தை பாருங்கள். சுழற்பந்து வீச்சாளர்களுக்கு பந்து நின்று திரும்புகிறது. இதனால்தான் இந்த கண்டீஷனில் (ஆடுகள தன்மை) எனக்கு சிக்கல் இருக்கிறது என சொல்கிறேன். ஏனெனில் வழக்கமாக டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாளன்று பந்து திரும்புவது போல இந்தப் போட்டியின் முதல் நாளில், அதுவும் ஆறாவது ஓவரில் பந்து திரும்புவதை பார்க்க முடிகிறது. உலகில் வேறு எங்கும் இதுபோல பார்க்க முடியாது. பேட்டர்களுக்கும் கொஞ்சம் வாய்ப்பு கொடுக்க வேண்டும்” என போட்டியை வர்ணனை செய்த ஹேடன் தெரிவித்திருந்தார்.
இந்தூர் டெஸ்ட் போட்டியின் நாளைய ஆட்டத்தில் இந்திய அணி பவுலர்கள், ஆஸ்திரேலிய அணி வீரர்களின் விக்கெட்டை விரைந்து கைப்பற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.