

இந்தியா - ஆஸ்திரேலியா 3வது டெஸ்ட் போட்டிக்கான ஆடும் லெவனில் கே.எல்.ராகுல் இடம்பெறவில்லை. டெஸ்ட் அணியில் அவரது இடம் குறித்து பலரும் விமர்சனங்களை முன்வைத்த நிலையில் ஆடும் லெவனில் அவர் இடம்பெறவில்லை.
30 வயதான கே.எல்.ராகுல், இந்திய அணிக்காக இதுவரை 47 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். 81 இன்னிங்ஸில் 2,642 ரன்கள் குவித்துள்ளார். இதில் 13 அரைசதம் மற்றும் 7 சதங்கள் அடங்கும். இருந்தபோதும் கடந்த ஓராண்டு காலமாக அவர் சரிவர ஆடுவதில்லை.
கடந்த 2022 முதல் அண்மையில் முடிந்த டெல்லி டெஸ்ட் போட்டி வரையில் ராகுல் மொத்தம் 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். மொத்தம் 11 இன்னிங்ஸ். அதில் முறையே 50, 8, 12, 10, 22, 23, 10, 2, 20, 17, 1 ரன்களை அவர் எடுத்துள்ளார். இந்தச் சூழலில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் அவர் இடம் பிடித்துள்ளார்.
அது குறித்து பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வந்த நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டிக்கான ஆடும் லெவனில் அவர் இடம்பெறவில்லை.
அணியில் ரோகித் சர்மா, சுப்மன் கில், சேத்தாஸ்வர் புஜாரா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ரவீந்தர் ஜடேஜா, ஸ்ரீகர் பாரதா, அக்ஸர் படேல், ரவிச்சந்திரன் அஸ்வின், உமேஷ் யாதவ், முகமது சிராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் கில் தங்களது விக்கெட்டை இழந்துள்ளனர். கில், ராகுலுக்கு மாற்றாக அணியில் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.