

லண்டன்: ஆறு ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து நாட்டில் நடைபெறும் உள்நாட்டு கால்பந்தாட்ட அணிகள் பங்கேற்று விளையாடும் EFL கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது மான்செஸ்டர் யுனைடெட் அணி. இந்த தொடர் ஸ்பான்ஸர்ஷிப் காரணமாக Carabao Cup என இப்போது அறியப்படுகிறது.
லண்டனில் உள்ள வெம்ப்லி மைதானத்தில் நியூகேஸ்டல் யுனைடெட் அணிக்கு எதிரான இந்த தொடரின் இறுதிப் போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் யுனைடெட் அணி வெற்றி பெற்றது. இந்த தொடரில் மான்செஸ்டர் யுனைடெட் அணி வெல்லும் ஆறாவது சாம்பியன் பட்டம் அது. கடைசியாக 2016-17 சீசனில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது அந்த அணி.
ஆட்டத்தின் 33-வது நிமிடத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக கேஸ்மிரோ, கோல் பதிவு செய்தார். தொடர்ந்து 39-வது நிமிடத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு இரண்டாவது கோல் கிடைத்தது. அது எதிரணி வீரர் கணக்கில் 'ஓன் கோல்' ஆனது. இரண்டாவது பாதியில் கோல் கணக்கை கூட்ட முயன்றது மான்செஸ்டர் அணி. ஆனால், இறுதிவரை அதற்கு பலன் கிடைக்கவில்லை. இறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் யுனைடெட் வெற்றி பெற்றது.