Last Updated : 22 Sep, 2017 04:22 PM

 

Published : 22 Sep 2017 04:22 PM
Last Updated : 22 Sep 2017 04:22 PM

குல்தீப் யாதவ் ஹாட்ரிக் தன் சாதனையை நினைவுபடுத்தியதாக ஹர்பஜன் நெகிழ்ச்சி

ஒரே எதிரணி, ஒரே மைதானம் ஹாட்ரிக் சாதனை அனைத்தும் ஒன்றுதான் பவுலர் மட்டும் வேறு அன்று நான், இன்று குல்தீப் யாதவ் என்று ஹர்பஜன் சிங் நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அந்த புகழ்பெற்ற 2001 தொடரில் (இந்திய கிரிக்கெட்டில் தலைகீழ் மாற்றம் ஏற்படுத்திய) கொல்கத்தாவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஹர்பஜன் சிங் ஹாட்ரிக் சாதனை புரிந்து வெற்றிக்கு இட்டுச் சென்றார்.

நெற்று குல்தீப் யாதவ் ஹாட்ரிக் சாதனை புரிந்து ஆஸ்திரேலியா தோல்வியை துரிதப்படுத்தினார்.

இது குறித்து ஹர்பஜன் சிங் கூறும்போது, “அதே எதிரணி, அதே மைதானம், அப்போதைய என் வயதைக் கொண்ட இன்னொரு ஸ்பின்னர் (குல்தீப்) சாதனை. குல்தீப் யாதவ் நேற்று சாதனை செய்ததைப் பார்த்தபோது என் நினைவுகள் 2001 டெஸ்ட் போட்டியின் இனிமையான நினைவுகளுக்கு பின்னோக்கிச் சென்றது. குல்தீப் சாதனை மகத்தானது.

சிறிய வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் ஹாட்ரிக் எடுத்தால் அந்த வீரரின் நம்பிக்கை வேறு ஒருதளத்துக்கு உயரும். இந்த மைல் கல்லை எந்த ஒரு வீரராக இருந்தாலும் தன் வாழ்நாள் முழுதும் மறக்க முடியாது.

ஈடன் கார்டன் மைதானம் யாரையும் வெறுங்கையுடன் அனுப்புவதில்லை. குல்தீப்பின் இந்தச் சாதனை வரலாற்றுப் புத்தகத்திலிருந்து நீக்கப்பட முடியாதது.

இரண்டு ஸ்பின்னர்கள் அபாரமாக வீசும்போது மூத்த ஸ்பின்னர்கள் அணிக்கு மீண்டும் வருவது கடினமே. ஜடேஜா, அஸ்வின் இருவருமே இனி ஒருநாள் அணிக்குள் வருவது மிகக்கடினம்.

இப்போதைக்கு குல்தீப், சாஹல் மிக அருமையாக வீசுகின்றனர். எனவே இவர்கள் இருவரையும் நீக்கி விட்டு அஸ்வின், ஜடேஜா வருவது சாத்தியமில்லை. எதிர்காலம் நமக்காக என்ன வைத்திருக்கிறது என்பதை நாம் கணிக்க முடியாது.

பந்தை மணிக்கட்டு மூலம் திருப்பும் ரிஸ்ட் ஸ்பின்னர்கள் பிட்ச் உள்ளிட்ட சூழ்நிலைகளுக்குக் கட்டுப்படாத விஷயம் ஒன்றை கைகளில் வைத்துள்ளனர். சாஹல் நல்ல கூக்ளி வீசுகிறார் அதோடு லெக் ஸ்பின் பந்துகளை கடுமையாகத் திருப்புகிறார். குல்தீப் யாதவ்வும் இருபுறமும் திருப்புகிறார்.

இருவரும் காற்றில் வேறுபட்ட வேகத்தில் பந்தை செலுத்துகின்றனர். குல்தீப் கொஞ்சம் மெதுவாகச் செலுத்துகிறார், சாஹல் வேகமாக தாழ்வான பந்துகளை வீசுகிறார். இருவரது முதிர்ச்சியும் ஆச்சரியம் அளிக்கிறது, அதுவும் சூழ்நிலைகளைப் புரிந்து கொண்டு வீசுவதில் நல்ல முதிர்ச்சி.

இருப்பினும் உலகக்கோப்பை இன்னும் நீண்ட தொலைவில் உள்ளது, இவர்கள் ஆட்டம் எனக்குப் பெருமையாக உள்ளது, ஆனாலும் பொறுத்திருந்து பார்ப்போம். எவ்வளவு தூரம் இந்த இருவரும் இந்திய அணிக்காக சிறப்பாகச் செயல்பட முடிகிறது என்று பார்க்க வேண்டும் இருவரும் மேலும் மேலும் வலுப்பெற வாழ்த்துகிறேன்” இவ்வாறு கூறினார் ஹர்பஜன் சிங்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x