

இந்தியாவின் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போல் பாகிஸ்தானில் பாகிஸ்தான் சூப்பர் லீக் (பிஎஸ்எல்) நடைபெற்று வருகிறது. இதில் நேற்றைய ஆட்டத்தில் ஒரு சுவாரசியம் நிகழ்ந்தது. மகன் அடித்த சதம் காரணமாக தந்தையின் அணி வீழ்ந்தது என்பதே அது.
சர்பராஸ் அகமது தலைமையிலான குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணி ஷதாப் கான் தலைமையிலான இஸ்லாமாபாத் யுனைடெட் அணியை நேற்று எதிர்கொண்டது. குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்கு முன்னாள் பாகிஸ்தான் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனான மொயின் கான் பயிற்சியாளராக உள்ளார்.
இவரின் மகன் அசம் கான் இஸ்லாமாபாத் யுனைடெட் அணியில் இடம்பெற்றுள்ளார். தந்தையை போலவே அசம் கானும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்தான். நேற்றைய ஆட்டத்தில் அசம் கான் அபாரமாக விளையாடி தந்தையின் அணியை தோற்கடித்தார்.
முதலில் பேட் செய்த இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 220 ரன்களை எடுத்தது. இதில் அசம் கான் மட்டும் 97 ரன்கள் எடுத்திருந்தார். 42 பந்துகளை சந்தித்த அவர் அதிரடியாக விளையாடி 8 சிக்ஸர்கள் மற்றும் 9 பவுண்டரிகளுடன் 97 ரன்கள் குவித்தார்.
முன்னதாக, அரை சதம் கடந்ததும் தனது தந்தை மொயின் கானை நோக்கி நோக்கி சைகை செய்து, உங்களுக்காக இந்த அரைசதம் என்பதுபோல் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பதிலுக்கு மொயின் கான் கைதட்டி மகனை உற்சாகப்படுத்தினார்.
அசம் கானின் அதிரடி ஆட்டம் கைகொடுக்க, குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணி 19.1 ஓவர்களில் 157 ரன்களுக்கு சுருண்டு தோல்விகண்டது.