Published : 25 Feb 2023 09:35 PM
Last Updated : 25 Feb 2023 09:35 PM
தனது மனைவி அனுஷ்கா சர்மா மற்றும் குடும்ப உறுப்பினர்களைத் தவிர, தன்னை உண்மையாக அணுகிய ஓர் நபர் உண்டென்றால் அது முன்னாள் இந்திய கேப்டன் எம்.எஸ். தோனிதான் என்று விராட் கோலி நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் சில மாதங்கள் முன்புவரை ஆயிரக்கணக்கான நாட்கள் சதம் எடுக்க முடியாமல் தவித்துவந்தார்.
அவரது பேட்டிங் குறித்த விமர்சன பேச்சுகள் எழுந்தன. கேப்டன்சியை துறந்ததில் இருந்து ஏனோதானோ போக்கில் ஆடுகிறார் என்றெல்லாம் அவர்மீது விமர்சன கணைகள் ஏவப்பட்டன. ஆனால் அவர் இதையெல்லாம் காதில் போட்டுக் கொள்ளாமல் கடும் பயிற்சியில் இருந்து வந்தார். அதன் விளைவாக இழந்த தன் பார்மை மீண்டும் மெருகேறச் செய்த விராட், ஆசியக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக தன் முதல் டி20 சர்வதேச சதத்தை அடித்தார்.
கடந்த மாதம் இலங்கை அணிக்கு எதிராக 2 சதங்களை விளாசினார் கோலி. உலகிலேயே அதிக சதங்களாக 100 சதங்களை விளாசிய சச்சின் டெண்டுல்கரின் சாதனைக்குப் பிறகு ரிக்கி பாண்டிங்கைக் கடந்து விராட் கோலிதான் தற்போது இருக்கின்றார்.
செப்டம்பர் 2022-க்கும் முன்பாக அவர் வாழ்நாளில் கிரிக்கெட் பார்மில் அடிமட்டத்தில் இருந்தார். அணியில் விராட் கோலி தேவையா என்ற கேள்விகளெல்லாம் எழுந்தன. அனைத்து வடிவங்களிலும் தாறுமாறாக ஆட்டமிழந்து கொண்டிருந்தார், ரன்கள் அவரது மட்டையிலிருந்து வரவில்லை. கடைசியில் அவர் கிரிக்கெட்டிலிருந்து ஒரு மாதம் விடைபெற்று குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு புத்துணர்ச்சியுடன் திரும்பினார்.
அதன் பிறகுதான் ஆசியக் கோப்பை டி20 சதம், பிறகு டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக அந்த அபார சிக்சருடன் கூடிய வெற்றி இன்னிங்ஸ் என்று வரிசையாக மீண்டும் விரட்டல் மன்னன் ஆனார் விராட்.
இந்நிலையில் ஆர்சிபி அணி சார்பாக அவரை பேட்டி கண்ட போது அதில் தான் கஷ்ட காலத்தில் கடந்து வந்த பாதையை விவரித்தார். அப்போது அவர் கூறும்போது, “சுவாரசியமான விஷயம் என்னவென்றால், அனுஷ்கா எனக்குப் பெரிய பலமாக இருந்தார். மனைவி அனுஷ்கா சர்மாதான் என் பலமே.
இந்த ஒட்டுமொத்த கடினமான காலத்திலும் என்னுடன் ஆறுதலாக இருந்தவர் என் மனைவியே. அந்த சமயங்களில் நான் எப்படி உணர்ந்தேன், எனக்கு நிகழ்ந்தவைகள் என்னை பாதித்த விதத்தில் அருகில் இருந்து பார்த்தவர் அனுஷ்காதான். என்னுடைய சிறுபிராய பயிற்சியாளர், என்குடும்பத்தினர் தவிர என்னை உண்மையாகவே தொடர்பு கொண்ட ஒரே நபர் எம்.எஸ்.தோனி மட்டுமே” என்று கோலி நெகிழ்ச்சியுடன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT