Published : 25 Feb 2023 10:42 AM
Last Updated : 25 Feb 2023 10:42 AM

என் கடினமான காலத்தில் ஒரே உண்மையான உறுதுணை எம்.எஸ்.தோனி - மனம் திறந்த விராட் கோலி

எனது கடினமான காலத்தில் உண்மையான அக்கறையுடன் என்னை தொடர்பு கொண்ட ஒரே நபர் எம்.எஸ்.தோனி என்று விராட் கோலி மனம் திறந்து பேசியுள்ளார்.

ஆர்சிபி அணியின் சீசன் 2 பாட்காஸ்ட் நிகழ்ச்சியின் முதல் பாகத்தில் விராட்கோலி கலந்து கொண்டார். அதில் அவர் தோனியுடனான தனது நெருக்கம் பற்றி பேசினார்.

விராட் கோலி கூறியதாவது: நான் என் கிரிக்கெட் பயணத்தில் ஒரு வித்தியாசமான காலகட்டத்தை எதிர்கொண்டுள்ளேன். இந்த காலக்கட்டத்தில் எனக்கு எப்போதும் வலிமையின் ஊற்றாக இருக்கிறார் அனுஷ்கா. அவர் என்னை கூர்ந்து கவனித்து வருகிறார். நான் எதிர்கொண்டுள்ள சூழலை அவர் அறிவார். அனுஷ்கா, என் குடும்பத்தினர், எனது பயிற்சியாளர் தவிர என்னை உண்மையுடன் அணுகி உறுதுணையாக இருப்பவர் எம்.எஸ்.தோனி மட்டுமே.

தோனியை அவ்வளவு சீக்கிரம் தொடர்புகொண்டுவிட முடியாது. அவர் போனுக்கு அழைத்தால் 99 சதவீதம் அவர் அதை எடுக்க மாட்டார். ஏனென்றால் அவர் போனை பார்ப்பதே அரிது. ஒரு முறை அவர் எனக்கு ஒரு குறுந்தகவல் அனுப்பியிருந்தார். அதில், "நீங்கள் வலிமையானவராக இருக்கும் போதும். வலிமையானவர் என்று பிறரால் அறியப்படும்போதும் உங்களிடம் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்கக்கூட எல்லோரும் மறந்துவிடுவார்கள்" என்று குறிப்பிட்டிருந்தார்.

தோனியின் அந்த மெசேஜ் என்னை ஆசுவாசபடுத்தியது. ஏனென்றால் என்னை எப்போதும் எல்லோருமே துணிச்சலானவர், நம்பிக்கையானவர், வலிமையானவர், உணர்வுரீதியாக வலுவானார், எந்தச் சூழ்நிலையையும் எதிர்கொள்ளக் கூடியவர் என்று அறிகின்றனர். ஆனால் வாழ்க்கையில் சில நேரங்களில் யாராக இருந்தாலும் இரண்டு அடி பின்னோக்கிச் சென்று நம்மை நாமே நலம் அறிவது அவசியம். அது சறுக்கல் இல்லை. அதை நான் அன்று உணர்ந்தேன்.

பல நேரங்களில் இங்கே சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தி நீண்ட காலமாக வலுவாக இருந்த வீரர்கள் தங்களின் தற்போதைய நிலையை எடுத்துச் சொல்லும் வாய்ப்பு கிடைப்பதில்லை. அதனால்தான் நான் தோனி எனக்குச் சொன்னதை இங்கே எல்லோருடனும் பகிர்கிறேன். அவருக்கு நான் எதிர்கொண்டுள்ள நிலை புரியும் ஏனெனில் கடந்த காலங்களில் அவரே அந்தச் சூழலை எதிர்கொண்டிருக்கிறார். அந்த அனுபவத்தின் காரணமாக தான் அவர் என் நிலை உணர்ந்து என் மீது இரக்கமாகயிருக்கிறார். இவ்வாறு விராட் கோலி கூறியிருக்கிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x