

மும்பை: இந்திய சீனியர் மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனைகளை காட்டிலும் அண்டர் 19 அணியை சேர்ந்த வீராங்கனைகள் சிறப்பாக ஃபீல்டிங் செய்திருந்ததாக இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டயானா எடுல்ஜி தெரிவித்துள்ளார்.
நடப்பு மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதியில் இந்திய மகளிர் அணி, ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் தோல்வியை தழுவி இருந்தது. இந்த தோல்விக்கு முக்கியக் காரணம் களத்தில் இந்திய அணி வீராங்கனைகள் செய்திருந்த மிஸ் ஃபீல்டிங்தான். இந்த சூழலில் அதனை விமர்சித்துள்ளார் டயானா.
“இந்திய சீனியர் வீராங்கனைகளை காட்டிலும் அண்டர் 19 அணியை சார்ந்த வீராங்கனைகள் ஃபிட்டாக இருப்பதை என்னால் பார்க்க முடிகிறது. அவர்கள் சிறப்பாகவும் ஃபீல்டிங் செய்திருந்தனர். 2017 முதல் 2023 வரையில் ஒரே கதையை மீண்டும் மீண்டும் எழுதி வருகிறது இந்திய சீனியர் மகளிர் அணி.
உடல் தகுதி குறித்து பிசிசிஐ சரியான மதிப்பீட்டைக் மேற்கொள்ள வேண்டும். யோ-யோ டெஸ்ட் பெண்களுக்கு சற்று கடினமானது. அதை நான் அறிவேன். பெரும்பாலானவர்கள் அந்த சோதனையில் தோல்வி அடைவார்கள். ஆனால், உடற்தகுதித் தரத்தை உறுதி செய்ய வேறு வழிகள் உள்ளன.
இந்த தோல்விக்கு பிறகு நிச்சயம் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட வேண்டும். முதலில் ஃபிட்னஸை உறுதி செய்ய வேண்டும். ஃபீல்டிங் தரம், விக்கெட்டுகளுக்கு இடையே ஓடுதல் போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும். நட்சத்திர அந்தஸ்து ஒருபோதும் பலன் கொடுக்காது. வெல்ல வேண்டிய போட்டியை இழக்கிறோம்” என அவர் தெரிவித்துள்ளார்.