

பாரீஸ்: உலகின் பிரபல கால்பந்தாட்ட கிளப் அணிகளில் ஒன்றான பார்சிலோனா அணிக்காக மீண்டும் நட்சத்திர வீரர் மெஸ்ஸி விளையாட உள்ளதாக பல்வேறு ஊகங்கள் சொல்லப்பட்டு வருகிறது. மெஸ்ஸிக்கும் பார்சிலோனா அணிக்கும் இடையிலான பந்தம் உயிரும், மூச்சும் போன்றது.
35 வயதான மெஸ்ஸி, பிறந்தது என்னவோ அர்ஜென்டினாவில்தான். ஆனால், அவரை வளர்த்தெடுத்தது ஸ்பெயின்தான். ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா அணிதான் அவரது திறனை அடையாளம் கண்டு இளம் வயதிலேயே வாய்ப்பு கொடுத்தது. கடந்த 2000-ம் முதல் 2021 வரையில் பார்சிலோனா அணியின் அங்கமாக மெஸ்ஸி இருந்தார்.
கால்பந்தாட்ட களத்தில் சர்வதேச போட்டிகள் என்றால் ‘நீ வேறு நாடு, நான் வேறு நாடு’ என ரசிகர்கள் பிரிந்து நின்றாலும் கிளப் அளவிலான போட்டியில் அப்படி பிரிந்து நிற்க மாட்டார்கள். அதன் காரணமாகவே பார்சிலோனாவின் முகமாக மெஸ்ஸி அறியப்பட்டார். 2004 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் பார்சிலோனா சீனியர் அணிக்காக 520 போட்டிகளில் 474 கோல்களை அவர் பதிவு செய்திருந்தார்.
இருந்தும் 2021 ஜூலையில் மெஸ்ஸி, பார்சிலோனா இடையிலான பந்தம் முடிவுக்கு வந்தது. அவர் இனி தங்கள் அணிக்காக விளையாட மாட்டார் என பார்சிலோனா அறிவித்தது. மெஸ்ஸியும் கண்ணீர் மல்க விடைபெற்றார். அதன் பின்னர் பிரான்ஸ் நாட்டின் பிஎஸ்ஜி அணியில் இணைந்தார். இது இரண்டு ஆண்டு கால ஒப்பந்தம் ஆகும். 2021 முதல் 2023 ஜூன் வரையிலான ஒப்பந்தம்.
பிஎஸ்ஜி அணியுடனான மெஸ்ஸியின் ஒப்பந்தம் அடுத்த சில மாதங்களில் முடிவுக்கு வர உள்ளது. இந்தச் சூழலில் அண்மையில் மெஸ்ஸியின் தந்தை ஜோர்ஜ், பார்சிலோனா அணியின் தலைவரை சந்தித்துள்ளார். இதனை ஸ்பெயின் நாட்டு ஊடகங்கள் உறுதி செய்துள்ளன. அதே நேரத்தில் இது குறித்து மெஸ்ஸியின் சகோதரர் மட்டியாஸ் முன்பு கருத்து சொல்லி இருந்தார். பிஎஸ்ஜி அணிக்காக 45 போட்டிகளில் 17 கோல்களை மட்டுமே மெஸ்ஸி பதிவு செய்துள்ளார்.
இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது மெஸ்ஸி, பார்சிலோனாவுக்கு திரும்புவது குறித்து ஆலோசித்து வருவது போல தெரிகிறது என ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பத்திரிகையாளர் ஜெரார்ட் ரொமேரியோ தெரிவித்துள்ளார். அதில் மெஸ்ஸி அதிக ஆர்வத்துடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.