

ஹைதராபாத்: எதிர்வரும் ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை தென்னாப்பிரிக்க வீரர் எய்டன் மார்க்ரம், கேப்டனாக வழிநடத்துவார் என அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. அண்மையில் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற SA20 லீக் தொடரில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. அந்த அணியை மார்க்ரம் வழிநடத்தி இருந்தார்.
ஹைதராபாத் அணியை இதற்கு முன்னர் ஆஸ்திரேலியாவின் வார்னர் மற்றும் நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன் ஆகியோர் வழிநடத்தி உள்ளனர். தற்போது அவர்கள் இருவரும் அந்த அணியில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. SA20 லீக் தொடரில் 366 ரன்கள் மற்றும் 11 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார் மார்க்ரம். அதன் மூலம் தொடர் நாயகன் விருதையும் அவர் வென்றிருந்தார்.
28 வயதான மார்க்ரம் கடந்த ஆண்டு முதல் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். வலது கை பேட்ஸ்மேன் மற்றும் ஆஃப் பிரேக் பவுலர். 31 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 879 ரன்கள் மற்றும் 7 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றி உள்ளார். 20 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 527 ரன்கள் எடுத்துள்ளார் அவர்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விவரம்: மார்க்ரம் (கேப்டன்), அப்துல் சமாத், ராகுல் திரிபாதி, கிளென் பிலிப்ஸ், அபிஷேக் சர்மா, மார்கோ ஜான்சன், வாஷிங்டன் சுந்தர், ஃபசல்ஹக் ஃபரூக்கி, கார்த்திக் தியாகி, புவனேஷ்வர் குமார், நடராஜன், உம்ரான் மாலிக், ஹாரி புரூக், மயங்க் அகர்வால், மயங்க் மார்கண்டே, அடில் ரஷீத், கிளாஸன், விவ்ராந்த் சர்மா, சமர்த் வியாஸ், சன்வீர் சிங், உபேந்திர யாதவ், மயங்க் டாகர், நிதிஷ் குமார் ரெட்டி, அகேல் ஹொசைன், அன்மோல்ப்ரீத் சிங்.