பயிற்சியாளருக்கும் கேப்டனுக்கும் தலைமுறை இடைவெளி உள்ளது: சுனில் கவாஸ்கர் கருத்து

பயிற்சியாளருக்கும் கேப்டனுக்கும் தலைமுறை இடைவெளி உள்ளது: சுனில் கவாஸ்கர் கருத்து
Updated on
1 min read

இந்திய கேப்டன் விராட் கோலிக்கும் பயிற்சியாளர் அனில் கும்ப்ளேவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் கும்ப்ளேவுக்கு மாற்றாக பயிற்சியாளர் தேர்வில் பிசிசிஐ இறங்கியுள்ளது. இதனையடுத்து சுனில் கவாஸ்கர் தன் கருத்தை தெரிவித்துள்ளார்.

அனில் கும்ப்ளேவின் பயிற்சி அணுகுமுறைகள் வீரர்களுக்கு மிகவும் கடினப்பாட்டை அளிக்கிறது, என்றும் சுதந்திரம் அளிப்பதில்லை என்றும், சில வீரர்கள் காயம் கிரிக்கெட் ஆட்டங்களில் ஏற்படாதது மாறாக கும்ப்ளேயின் கறாரான பயிற்சி அணுகுமுறைகளால் ஏற்பட்டது என்றும் பல்வேறு புகார்களை விராட் கோலி தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின.

மேலும் அனில் கும்ப்ளேவுக்கும் மற்ற வீரர்களுக்கும் உறவுமுறை சரியாக அமையவில்லை என்றும் வீரர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் கங்குலி, சச்சின் டெண்டுல்கர் ஆகியோரிடம் விராட் கோலி தெரிவித்ததாகவும் பிசிசிஐ தரப்பிலிருந்து அதிகாரபூர்வமற்ற செய்திகள் உலா வந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் சுனில் கவாஸ்கர் இது குறித்துக் கூறும்போது, “பயிற்சியாளரும், கேப்டனும் ஒத்த சிந்தனைகளைக் கொண்டிருக்க வேண்டிய சூழல் என்பது கிடையாது. காரணம் பயிற்சியாளர் என்பவர் எப்போதும் அணியின் கேப்டன் ஆடும் காலத்துக்கு முந்தைய காலக்கட்டத்தை, தலைமுறையைச் சேர்ந்தவராக இருப்பதே. எனவே முந்தைய தலைமுறை வீரரின் அணுகுமுறை வித்தியாசமாகவே இருக்கும்.

இதனை மிகவும் சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டிய தேவையில்லை, இந்த விவாதம் ஆரோக்கியமானதே. பயிற்சியாளர் என்பவர் இந்திய கிரிக்கெட்டுக்கு நன்மை பயப்பவராக இருக்க வேண்டும். மேலும் அடுத்த 8-10 ஆண்டுகளுக்கு இந்திய கிரிக்கெட்டை முன்னகர்த்திச் செல்வதற்கான செயல் திட்டங்களுடன் கூடிய தொலைநோக்குடையவராக பயிர்சியாளர் இருக்க வேண்டும்.

ஆனாலும் கும்ப்ளே, கோலி இடையே இருப்பதாக கதைக்கப்படும் சர்ச்சைகளின் உண்மைத்தன்மை குறித்து எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் இந்தச் சர்ச்சை எழுந்துள்ள நேரம் தவறான நேரமாகும். ஏனெனில் சாம்பியன்ஸ் டிராபி சமயத்தில் இந்தப் பிரச்சனை எழுந்திருக்கக் கூடாது.

கிரிக்கெட் இல்லாத நாட்களே இந்திய கிரிக்கெட்டுக்கு அச்சமூட்டும் நாளாக உள்ளது. இந்த சமயங்களில்தான் இத்தகைய செய்திகள் வெளியாகின்றன. ஏனெனில் கிரிக்கெட் ஆட்டங்கள் இல்லை என்பதே.

இந்தப் பிரச்சினையை தீர்ப்பது எப்படி என்று என்னிடம் கேட்டால் எனக்கு பதில் கூறுவது கடினமே. கிரிக்கெட் ஆட்டத்தை விட யாரும் பெரியவர்கள் கிடையாது. இந்திய கிரிக்கெட் என்பதே தலையாய முன்னுரிமையாக இருக்க வேண்டும்.

கும்ப்ளே பயிற்சியாளராக அபாரமாக செயல்பட்டார். நான் ஆட்ட முடிவுகளை வைத்து இதனைக் கூறுகிறேன். அதன் படி அவர் தவறாக எதுவும் செய்து விடவில்லை.

டெண்டுல்கர், கங்குலி, லஷ்மண் ஆகியோர் கிரிக்கெட் ஆட்டத்தின் லெஜண்ட்கள், இவர்கள் அனில் கும்ப்ளேவுடன் ஆடியிருக்கிறார்கள். இவர்களிடத்தில் மரியாதை இருக்கும் எனவே இவர்கள் கூறுவதை விராட் கோலி, அனில் கும்ப்ளே இருவரும் கேட்டுக் கொள்வார்கள்.

சாம்பியன்ஸ் டிராபி பயிற்சியாட்டங்களை வைத்துப் பார்க்கும் போது இந்திய பேட்டிங்கை விட பந்து வீச்சு நன்றாக உள்ளது” என்றார் கவாஸ்கர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in