

போர்ட் எலிஸபெத்: ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரை இறுதிக்கு இந்திய அணியை தகுதி பெற வைத்த வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவுக்கு அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் புகழாரம் சூட்டியுள்ளார்.
ஐசிசி டி20 மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது.
நேற்று முன்தினம் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா - அயர்லாந்து அணிகள் மோதின. முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய ஸ்மிருதி மந்தனா 56 பந்தில் 87 ரன்கள் விளாசினார்.
இதையடுத்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி களமிறங்கியது. முதல் பந்திலேயே துவக்க வீராங்கனை அமி ஹன்டர் ரன் அவுட் ஆகி வெளியேறினார். அந்த அணி 2 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் எடுத்திருந்தபோது பலத்த மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
மழை நிற்காமல் தொடர்ந்து பெய்ததால் ஆடுகளம் ஈரப்பதமானது. எனவே, போட்டி கைவிடப்பட்டு, டக்வொர்த் லீவிஸ் முறைப்படி வெற்றி தோல்வி முடிவு செய்யப்பட்டது.
அதன்படி இந்தியா 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆட்டநாயகியாக ஸ்மிருதி மந்தனா அறிவிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து இந்திய அணி, உலக கோப்பை அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. இதுகுறித்து கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கூறியதாவது:
இது ஒரு மிகச் சிறந்த ஆட்டமாக எங்களுக்கு அமைந்தது. முதலில் நாங்கள் விளையாடியபோது ஸ்மிருதி மந்தனா சிறப்பாக செயல்பட்டு அதிரடியாக ரன்களைக் குவித்தார். அவர் சிறந்த அடித்தளம் அமைத்ததால் நாங்கள் வலுவான ஸ்கோரை நோக்கிச் சென்றோம். அணி அரை இறுதிக்கு முன்னேறியதற்கு ஸ்மிருதி மந்தனாதான் காரணம். வரவிருக்கும் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.