

புதுடெல்லி: இந்தியாவுக்கு எதிரான கடைசி 2 கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகளிலும் ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. டெல்லியில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியின்போது மொகமது சிராஜ் வீசிய பந்து, டேவிட் வார்னரின் இடது முழங்கையைத் தாக்கியது. இதனால் வார்னருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது.
அவரது இடது முழங்கை எலும்பில் லேசான முறிவு ஏற்பட்டுள்ளதாக டாக்டர்களின் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர் சிட்னிக்குச் சென்று சிகிச்சை மேற்கொள்ளவுள்ளார். இதனால் அவர் கடைசி 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடமாட்டார் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது.