Published : 29 May 2017 09:22 AM
Last Updated : 29 May 2017 09:22 AM

இந்தியா - நியூஸிலாந்து இடையிலான பயிற்சி கிரிக்கெட் மழையால் பாதிப்பு

இந்தியா - நியூஸிலாந்து அணி களுக்கு இடையிலான பயிற்சி கிரிக்கெட் போட்டி மழை காரணமாக பாதிக்கப்பட்டது.

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் 1-ம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இப்போட்டிக்கு முன்னதாக இந்தியா - நியூஸிலாந்து அணிகள் பங்கேற்கும் பயிற்சி ஆட்டம் லண்டனில் நேற்று நடந்தது. டாஸில் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இப்போட்டியில் காய்ச்சல் காரணமாக யுவராஜ் சிங்கும், தாமதமாக இங்கிலாந்துக்கு சென்றதால் ரோஹித் சர்மாவும் இந்திய அணியில் ஆடவில்லை.

இந்தியாவுக்கு எதிராக அதிக ரன்களைக் குவிக்கும் கனவுடன் நியூஸிலாந்து அணி, பேட்டிங்கைத் தொடங்கியது. ஆனால் இந்திய வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமியின் ஆக்ரோஷமான பந்துவீச்சால் அந்த கனவு தவிடு பொடியானது. கப்தில் (9 ரன்கள்), வில்லியம்சன் (8 ரன்கள்), புரூம் (0) ஆகியோரின் விக்கெட்களை ஷமி சரசரவென்று வீழ்த்த, நியூஸிலாந்தின் அஸ்திவாரம் ஆட்டம் கண்டது. ஷமி விக்கெட்களை எடுத்தது போதாதென்று புவனேஷ் குமாரும் 3 விக்கெட்களை வீழ்த்த நியூஸிலாந்தின் நிலை மேலும் திண்டாட்டமானது.

நியூஸிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரரான ரோஞ்சி மட்டும் ஓரளவு நிலையாக ஆடி 63 பந்துகளில் 66 ரன்களைச் சேர்த்தார். கடைசி கட்டத்தில் நீஷம் அவுட் ஆகாமல் 46 ரன்களைச் சேர்க்க, நியூஸிலாந்து அணி 38.4 ஓவர்களில் 189 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் ஷமி, புவனேஷ் குமார் ஆகியோர் தலா 3 விக்கெட்களை கைப்பற்றினர். ஜடேஜா 2 விக்கெட் களையும், அஸ்வின், உமேஷ் யாதவ் ஆகியோர் தலா 1 விக்கெட் டையும் எடுத்தனர். இப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாண் டியா 6 ஓவர்களில் 49 ரன்களைக் கொடுத்து விக்கெட் எதையும் கைப்பற்றாமல் ஏமாற்றினார்.

வெற்றிபெற 190 ரன்களை எடுக்கவேண்டும் என்ற நிலையில் ஆடவந்த இந்திய அணி, 30 ரன்களில் ரஹானேவின் விக்கெட்டை இழந்தது. 12 பந்துகளில் 7 ரன்களை எடுத்த அவர், சவுத்தியின் பந்தில் அவுட் ஆனார். இதைத்தொடர்ந்து ஷிகர் தவணுடன் கோலி ஜோடி சேர்ந்தார். இவர்கள் இருவரும் சேர்ந்து 2-வது விக்கெட்டுக்கு 68 ரன்களைச் சேர்த்தனர். அணியின் ஸ்கோர் 98 ரன்களாக இருக்கும்போது ஷிகர் தவண் (40 ரன்கள்) ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த தினேஷ் கார்த்திக் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆக இந்திய அணி 3 விக்கெட்டுக்கு 104 ரன்கள் என்று தடுமாறியது.

4-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கோலியும், தோனியும் இந்தியாவை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் இந்திய அணி 26 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 129 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இருப்பினும் ஆட்டம் நிறுத்தப்பட்டபோது டக்வோர்த் லூயிஸ் முறைபடி இந்திய அணியே முன்னணியில் இருந்தது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x